தமிழ்நாடு

மன்னார்குடி அரசு மகளிர் கல்லூரியில் மாணவர் சேர்க்கை: இணையவழி விண்ணப்பப் பதிவு நாளை (அக். 1) முதல் தொடக்கம்!

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் புதிதாகத் தொடங்கப்பட்ட அரசு மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மாணவிகள் சேர்க்கைக்கான இணையவழி விண்ணப்பப் பதிவு நாளை (அக். 1) காலை 11 மணி முதல் தொடங்குகிறது என அமைச்சர் கோவி. செழியன் அறிவித்துள்ளார்.

மன்னார்குடி அரசு மகளிர் கல்லூரியில் மாணவர் சேர்க்கை: இணையவழி விண்ணப்பப் பதிவு நாளை (அக். 1) முதல் தொடக்கம்!
அமைச்சர் முனைவர் கோவி. செழியன்
சென்னை: தமிழ்நாடு முதலமைச்சரால் புதிதாக அறிவிக்கப்பட்டுத் தொடங்கப்பட்டுள்ள மன்னார்குடி அரசு மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மாணவிகள் சேர்க்கைக்கான இணையதள விண்ணப்பப் பதிவு நாளை (அக்டோபர் 1, 2025) காலை 11.00 மணிக்குத் துவங்கவுள்ளதாக உயர்கல்வித் துறை அமைச்சர் முனைவர் கோவி. செழியன் தெரிவித்துள்ளார்.

புதிய கல்லூரியின் நோக்கம்:

திருவாரூர் மாவட்டத்தில் நடந்த அரசு விழாவில், மன்னார்குடி பகுதியிலிருக்கும் மாணவிகளின் உயர்கல்வித் தேவையைப் பூர்த்தி செய்யும் நோக்குடன் மன்னார்குடி நகராட்சியில் புதிய அரசு மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி அமைக்கப்படும் என்ற அறிவிப்பை முதலமைச்சர் வெளியிட்டார்.

அதற்கிணங்க, தற்போது திருவாரூர் மாவட்டம், மன்னார்குடியில் புதிய அரசு மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி தொடங்க உரிய அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

பாடப்பிரிவுகள் மற்றும் விண்ணப்பிக்கும் முறை:

இந்தக் கல்லூரியில் ஆரம்ப கட்டமாக 5 புதிய பாடப்பிரிவுகள் தொடங்கப்பட்டுள்ளன:

பி.ஏ. வரலாறு

பி.காம்.

பி.எஸ்.சி. கணினி அறிவியல்

பி.எஸ்.சி. நுண்ணுயிரியல் (Microbiology)

பி.சி.ஏ. (BCA)

அக்கல்லூரியில் மாணவிகள் சேர்க்கை மேற்கொள்ளும் வகையில், ஒரு சிறப்பு நேர்வாக அக்டோபர் 1, 2025 காலை 11.00 மணி முதல் விண்ணப்பப் பதிவு மேற்கொள்ள முடிவெடுக்கப்பட்டுள்ளது.

அதன்படி, மாணவிகள் இணையதள விண்ணப்பப் பதிவுக்காக www.tngasa.in என்ற இணையதள முகவரியைப் பயன்படுத்தலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.