தமிழ்நாடு

தாயை சுட்ட மகன்.. சொத்து தகராறில் நடந்த விபரீதம்!

விருத்தாச்சலம் அருகே சொத்து தகராறில் தனது தாயினை சப் இன்ஸ்பெக்டராக பணிபுரியும் மகன் துப்பாக்கியால் சுட்ட சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தாயை சுட்ட மகன்.. சொத்து தகராறில் நடந்த விபரீதம்!
தாயை சுட்ட மகன்.. சொத்து தகராறில் நடந்த விபரீதம்!
கடலுார் மாவட்டம், விருத்தாச்சலம் அடுத்த கம்மாபுரம் மேட்டுத்தெருவைச் சேர்ந்தவர் குப்புசாமி மகன் வீரபாண்டியன்(வயது 39 ). இவர் கடந்த 22-ம் தேதி தனது தாய் பத்மாவதி (வயது 70) என்பவரிடம் தனக்கான நிலத்தை பிரித்துக்கொடுக்க சொல்லி, வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.அப்போது, இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

இதில், ஆத்திரமடைந்த வீரபாண்டியன், தான் மறைத்து வைத்திருந்த ஏர்கன் வகை துப்பாக்கியால், தாய் பத்மாவதியை தொடை மற்றும் தோள்பட்டை பகுதியில் சுட்டுள்ளார். இதில், பத்மாவதி படுகாயமடைந்துள்ளார்.

இதனால் அச்சமடைந்த வீரபாண்டியன், யாருக்கும் தெரியாமல் தாய் பத்மாவதியை, அருகில் இருந்த மெடிக்கல் ஷாப்பிற்கு அழைத்துச் சென்று முதலுதவி செய்துள்ளார். இதனைத் தொடர்ந்து விருத்தாச்சலம், பெண்ணாடம் சாலையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில், தனது தாய் பத்மாவதியை சிகிச்சைக்காக சேர்த்துள்ளார்.

துப்பாக்கிச் சூட்டினால் தொடை பகுதியில் ஏற்பட்ட காயத்திற்கு, ஆப்ரேஷன் செய்யும் நிலை ஏற்பட்டுள்ளது. அறுவைச் சிகிச்சையினை தொடர்ந்து நேற்று பத்மாவதி மருத்துவமனையிலிருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளார்.

இதையறிந்த உளவுத்துறை போலீசார், உயர் அதிகாரிக்கு தகவல் அளித்த நிலையில், போலீசார் தங்களது விசாரணையினை தொடங்கினர். அதில், வீரபாண்டியன், சொத்து தகராறில் தனது தாய் பத்மாவதியை ஏர்கன் துப்பாக்கியால் சுட்டது உறுதி செய்யப்பட்டது. மேலும், இந்த சம்பவம் குறித்து கம்மாபுரம் போலீசார் வீரபாண்டியன் மீது வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

போலீசாரின் விசாரணையில், கடந்த செவ்வாய்க்கிழமை இந்த சம்பவம் நடைப்பெற்ற போது, கம்மாபுரம் தனிப்பிரிவு காவலர், எஸ்.பி.,க்கு தகவல் தெரிவிக்காமல் இருந்ததும் தெரியவந்துள்ளது.

மேலும், இதுத்தொடர்பாக கம்மாபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்யாமல், பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளனர். இதனைத் தொடர்ந்து சப்- இன்ஸ்பெக்டர் கொளஞ்சி, தனிப்பிரிவு காவலர் சரவணன் ஆகிய இருவரையும், ஆயுதபடைக்கு மாற்றம் செய்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உத்தரவிட்டுள்ளார். மேலும் குற்றவாளியான வீரபாண்டியனை கைது செய்ய போலீசார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.