மறைந்த நடிகர் சிவாஜி கணேசனின் பேரனும், நடிகருமான துஷ்யந்த் அவரது மனைவி அபிராமி ஆகியோர் பங்குதாரர்களாக உள்ள ஈசன் புரொடக்சன்ஸ் நிறுவனம் சார்பில் நடிகர் விஷ்ணுவிஷால், நடிகை நிவேதா பெத்துராஜ் உள்ளிட்டோர் நடிப்பில் 'ஜகஜால கில்லாடி' என்ற படத்தை தயாரித்தனர்.
பட தயாரிப்புக்காக தனபாக்கியம் எண்டர்பிரைசஸ் நிறுவனத்திடம் 3 கோடியே 74 லட்சத்து 75 ஆயிரம் ரூபாய் கடன் வாங்கியிருந்தனர். இந்த கடனை ஆண்டுக்கு 30 சதவீத வட்டியுடன் திருப்பிக் கொடுப்பதாக உறுதி அளிக்கப்பட்டிருந்தது. ஆனால் கடன்தொகையை திருப்பி தராததை அடுத்து இந்த விவகாரத்தில் தீர்வு காணும் வகையில் சென்னை உயர் நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி டி.ரவீந்திரன் மத்தியஸ்தராக நியமிக்கப்பட்டார்.
இந்த விவகாரத்தை விசாரித்த மத்தியஸ்தர் நீதிபதி ரவீந்திரன், கடன் தொகை மற்றும் வட்டியுடன் சேர்த்து 9 கோடியே 2 லட்சத்து 40 ஆயிரம் ரூபாயை வசூலிக்க ஏதுவாக, 'ஜகஜால கில்லாடி' படத்தின் அனைத்து உரிமைகளையும், தனபாக்கியம் எண்டர்பிரைசஸ் நிறுவன நிர்வாக இயக்குநரிடம் ஒப்படைக்கும்படி கடந்த 2024-ம் ஆண்டு மே 4-ம் தேதி உத்தரவிட்டார். மேலும், உரிமைகளைப் பெற்று அவற்றை விற்று கடன் தொகையை ஈடு செய்யவும், மீதித்தொகையை ஈசன் புரொடக்ஷன்ஸ் நிறுவனத்திடம் வழங்குமாறும் அவர் தெரிவித்திருந்தார்.
இந்த உத்தரவின்படி படத்தின் அனைத்து உரிமைகளையும் வழங்கக் கோரிய போது, படம் முழுமையடையவில்லை எனக் கூறி பட தயாரிப்பு நிறுவனம் சார்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டதால், மத்தியஸ்தர் தீர்ப்பை அமல்படுத்தும் வகையில், ராம்குமாரின் தந்தையான சிவாஜி கணேசனின் வீட்டை ஜப்தி செய்து, பொது ஏலம் விட உத்தரவிடக் கோரி, தனபாக்கியம் எண்டர்பிரைசஸ் நிறுவனம் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்திருந்தது.
அந்த மனுவில், தற்போது வரை கடன் தொகை வட்டியுடன் சேர்த்து 9 கோடியே 39 லட்சத்து 5 ஆயிரத்து 543 ரூபாய் வசூலிக்க வேண்டியுள்ளதாகக் கூறப்பட்டுள்ளது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி அப்துல் குத்தூஸ், பதில்மனு தாக்கல் செய்ய ஈசன் புரொடக்ஷன்ஸ் தரப்பில் அவகாசம் கேட்ட நிலையில் இதுவரை பதில்மனு தாக்கல் செய்யவில்லை எனக் கூறி, நடிகர் சிவாஜி கணேசனின் வீட்டை ஜப்தி செய்ய உத்தரவிட்டார்.
இந்நிலையில், நடிகர் சிவாஜி கணேசனின் வீட்டில் தனக்கு எந்த பங்கும் இல்லாத நிலையில் அந்த வீட்டை ஜப்தி செய்ய பிறப்பித்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என சிவாஜி கணேசனின் மூத்த மகன் ராம்குமார் தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் கோரிக்கை வைக்கப்பட்டது.
இதையடுத்து, ஜப்தி உத்தரவை ரத்து செய்யக் கோரி மனுத்தாக்கல் செய்ய ராம்குமார் தரப்புக்கு அனுமதி வழங்கிய நீதிமன்றம் கடன் பிரச்னைக்கு தீர்வு காணும்படி அறிவுறுத்தி வழக்கின் விசாரணையை ஏப்ரல் 3-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தது. சிவாஜி கணேசனின் ’அன்னை இல்லம் வீடு’ நடிகர் பிரபுவுக்கு சொந்தமானது என்று தகவல் வெளியாகியுள்ளது.