சென்னை அண்ணா பல்கலைக் கழக வளாகத்தில் மாணவி ஒருவரும் அவரது காதலனான மாணவன் ஒருவரும் தனிமையில் இருந்ததாக கூறப்படுகிறது. அவர்கள் தனிமையில் இருப்பதை தொலைபேசியில் வீடியோவாக பதிவு செய்த ஞானசேகரன், மாணவியை மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இச்சம்பவம் தொடர்பாக, அந்த மாணவி கோட்டூர்புரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார்.
ஆதாரங்களின் அடிப்படையில் ஞானசேகரனை கைது செய்த காவல்துறையினர் சென்னை சைதாப்பேட்டை 11-வது பெருநகர குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி சுல்தான் ஹர்கான், ஞானசேகரனை ஜனவரி 8-ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிட்டுள்ளார். திமுக பிரமுகர் ஞானசேகரனுக்கு இடது கை மற்றும் இடது காலில் எலும்பு முறிவு ஏற்பட்டு மாவு கட்டு போடப்பட்டுள்ளதால் நீதிமன்ற காவலில் ஸ்டான்லி மருத்துவமனையில் உள்ள குற்றவாளிகள் சிகிச்சை பிரிவில் (Convict Ward) சிகிச்சைக்காக அனுமதிக்கபப்ட்டுள்ளார்.
இச்சம்பவம் தொடர்பாக வெளியான முதல் தகவல் அறிக்கையில், தாங்கள் தனியாக இருந்ததை வீடியோ எடுத்து டீன் மற்றும் பேராசிரியரிடம் காண்பித்து டிசியை தரவைப்பேன் என ஞானசேகரன் மிரட்டியதாகவும், அலைபேசியில் இருந்த தனது தந்தை செல்போன் எண்ணை எடுத்துக் கொண்டு அவருக்கு வீடியோ அனுப்பி விடுவதாக மிரட்டியதாகவும் மாணவி தெரிவித்துள்ளார். மேலும், தனக்கு அடிபணியவில்லை என்றால் வீடியோவை சமூக வலைதளங்களில் பதிவிட்டு விடுவேன் எனக்கூறி வலு கட்டாயமாக தன்னை பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகினார் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்நிலையில், கைதான ஞானசேகரன் குறித்து புதிய தகவல்கள் வெளியாகியுள்ளது. அதன்படி, ஞானசேகரன் செல்போன் எண்ணை வைத்து காவல்துறையிடம் சிக்காமல் இருக்க, flight mode-யில் செல்போனை வைத்திருந்ததாகவும் செல்போனில் மற்றொரு நபரிடம் பேசியது போல் நாடகமாடி உள்ளதும் போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது. அதுமட்டுமல்லாமல், பாதிக்கப்பட்ட மாணவி இரவு முழுவதும் அறையில் அழுது கொண்டிருந்ததாகவும், பின்னர் மறுநாள் காலையில் தோழிகளிடம் நடந்த சம்பவம் குறித்து கூறிய பின்னர் காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தொடர்பு கொண்டு முதலில் புகார் தெரிவித்துள்ளார்.
பாலியல் வன்கொடுமை செய்த மாணவி குறித்த வீடியோ மட்டுமல்லாமல் மேலும் சில வீடியோக்களும் ஞானசேகரன் செல்போனில் இருந்ததை காவல்துறையினர் கண்டுபிடித்துள்ளனர். சிசிடிவி கேமரா முன்பு முகத்தை மூடிவிட்டு செல்லும்போது, கோட்டூர்புரம் காவல் நிலையத்தின் பழைய குற்றவாளி என்பதால் ஞானசேகரன் அடையாளம் குறித்து காவல்துறைக்கு தெரியவந்துள்ளது. ஞானசேகரனை காவல்துறை பிடித்த பின்னர், வீடியோ கால் மூலம் பாதிக்கப்பட்ட மாணவி உறுதி செய்துள்ளார். சந்தேகப்படும்படி அண்ணா பல்கலைக்கழக மாணவர்கள் உட்பட அங்கு இருந்த 500-க்கும் மேற்பட்டோரிடம் காவல்துறை விசாரணை நடத்தியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.