தமிழ்நாடு

கடும் வெயிலால் உயிரிழந்த தூய்மை பணியாளர்- இழப்பீடு வழங்க கோரிக்கை

மதுரையில் கடும் வெயிலால் பணியின்போது மயங்கி விழுந்து தூய்மை பணியாளர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கடும் வெயிலால் உயிரிழந்த தூய்மை பணியாளர்- இழப்பீடு வழங்க கோரிக்கை
மதுரை மாநகராட்சிக்கு உட்பட்ட நாகனாகுளம் ஆதிதிராவிடர் காலனி பகுதியைச் சேர்ந்தவர் மணிவேல் (55). இவர் மதுரை மாநகராட்சி 5-ஆவது வார்டுக்கு உட்பட்ட பகுதியில் தொகுப்பூதியத்தின் கீழ் தூய்மை பணியாளராக பணியாற்றி வருகிறார். இவர் நேற்று காலை 5-ஆவது வார்டு பகுதிகளில் குப்பைகள் சேகரிக்கும் பணியில் ஈடுபட்டதை அடுத்து தனது வண்டியில் குப்பைகளை கொண்டு வந்து தொட்டியில் கொட்டியுள்ளார்.

அப்போது கடுமையான வெயிலின் தாக்கம் காரணமாக திடீரென மணிவேல் மயக்கம் அடைந்து குப்பை தொட்டியின் அருகிலே சரிந்து விழுந்துள்ளார். இதில் அங்கிருந்த கற்கள் மீது விழுந்ததால் பின்புற தலையில் பலத்த காயம் ஏற்பட்டு ரத்தம் வெளியேறியுள்ளது. இதனை பார்த்த அருகில் இருந்த சக தூய்மை பணியாளர்கள் மாநகராட்சி அலுவலர்களுக்கு தகவல் அளித்துள்ளனர்.

தொடர்ந்து, ஆம்புலன்ஸ் மூலமாக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு மணிவேலை சிகிச்சைக்காக அனுப்பிவைத்தனர். மருத்துவமனையில் மணிவேலின் உடலை பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவர் உயிரிழந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர். தனது கணவர் கடுமையான வெயில் தாக்கத்தால் மயங்கி விழுந்து உயிரிழந்து விட்டதாக தல்லாகுளம் காவல்நிலையத்தில் மணிவேலின் மனைவி புகார் அளித்ததையடுத்து தல்லாகுளம் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மதுரை மாவட்டம் முழுவதிலும் வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் தூய்மை பணிகளில் ஈடுபடக்கூடிய தூய்மை பணியாளர்களுக்கு பணி நேரத்தை குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் வெயில் காலங்களில் தூய்மை பணியாளர்களின் களைப்பை போக்கும் வகையில் குளிர்பானங்கள், மோர் உள்ளிட்டவை வழங்குவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் எனவும் கோரிக்கை எழுந்துள்ளது.

உயிரிழந்த மணிவேல் தொகுப்பூதிய பணியாளராக பணியாற்றிய நிலையிலேயே கடும் வெயிலால் மயங்கி உயிரிழந்த நிலையில் தங்களது குடும்பத்திற்கு உரிய இழப்பீடு தொகை வழங்க வேண்டும் என குடும்பத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.