தமிழ்நாடு

சென்னை மே தின பூங்காவில் பரபரப்பு: தூய்மை பணியாளர்களை கைது செய்த போலீசார்!

சென்னை, சிந்தாதிரிப்பேட்டையில் உள்ள மே தின பூங்காவில் ஒன்று கூடிய 600க்கும் மேற்பட்ட தூய்மை பணியாளர்களை, போலீசார் வலுக்கட்டாயமாக கைது செய்ததால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

சென்னை மே தின பூங்காவில் பரபரப்பு: தூய்மை பணியாளர்களை கைது செய்த போலீசார்!
சென்னை மே தின பூங்காவில் பரபரப்பு: தூய்மை பணியாளர்களை கைது செய்த போலீசார்!
கடந்த மாதம், தூய்மைப் பணியாளர்கள் தங்கள் பணிகளை நிரந்தரம் செய்யக் கோரியும், தனியார்மயமாக்கலை கைவிட வலியுறுத்தியும், ரிப்பன் மாளிகை முன்பு 13 நாட்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர். நீதிமன்ற உத்தரவின் பேரில் அந்தப் போராட்டம் முடிவுக்கு வந்த நிலையில், இன்று அவர்கள் மீண்டும் மே தின பூங்காவில் ஒன்று கூடியதாகக் கூறப்படுகிறது.

ஊடகங்கள் உள்ளே செல்லத் தடை

இந்தத் தகவலின் பேரில், இணை ஆணையர் விஜயகுமார் தலைமையில் 300க்கும் மேற்பட்ட போலீசார் பூங்காவைச் சுற்றி வளைத்தனர். தூய்மைப் பணியாளர்களைக் கைது செய்வதற்காக வாகனங்கள் கொண்டுவரப்பட்டு, அவர்களைக் குண்டு கட்டாகத் தூக்கிச் சென்றனர். அப்போது, ஒரு பெண் தூய்மைப் பணியாளர் தாக்கப்பட்டதில் காயம் ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. மேலும், போலீசார் கயிறுகளைக்கொண்டு ஊடகங்கள் உள்ளே சென்று செய்தி சேகரிக்க விடாமல் தடுத்தனர்.

இதற்கு தூய்மைப் பணியாளர்கள் கடும் கண்டனம் தெரிவித்தனர். "நாங்கள் போராட்டம் நடத்தவில்லை. அடுத்த கட்ட நடவடிக்கை குறித்துப் பேசுவதற்காகவே ஒன்று கூடினோம். ஆனால், காவல்துறை அராஜகப் போக்கைக் கையாள்கிறது" என்று அவர்கள் குற்றம் சாட்டினர்.

கைது செய்யப்பட்ட தூய்மைப் பணியாளர்கள் குமரன் நகர் மற்றும் மவுண்ட் உள்ளிட்ட பல்வேறு திருமண மண்டபங்களில் அடைத்து வைக்கப்பட்டுள்ளனர். மே தின பூங்காவைச் சுற்றியும் தொடர்ந்து 300க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டு உள்ளதால், அப்பகுதியில் பதற்றமான சூழ்நிலை நிலவி வருகிறது.