தமிழ்நாடு

ரூ.2 லட்சம் மாயம்: "கடன் பாக்கி" எனக் கூறி முதியவருக்குப் பணம் வழங்க மறுத்த வங்கி!

சென்னை மண்ணடியை சேர்ந்த முதியவர் இந்தியன் வங்கியில் டெபாசிட் செய்த ரூ.2 லட்சம் கணக்கில் இருந்து மாயமானதால் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

ரூ.2 லட்சம் மாயம்:
Bank refuses to give money to elderly man
சென்னை மண்ணடி தம்புசெட்டி தெருவில் உள்ள இந்தியன் வங்கிக் கிளையில், ரூ.2 லட்சம் டெபாசிட் செய்திருந்த முதியவர் ஒருவருக்கு, முதிர்வு காலத்தில் பணம் வழங்க மறுத்து, அவர் பெயரில் ரூ.1.80 லட்சம் கடன் பாக்கி இருப்பதாக வங்கி நிர்வாகம் கூறியதால் அதிர்ச்சியடைந்து காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

சம்பவத்தின் பின்னணி

மண்ணடி புது தெருவில் வசித்து வரும் 70 வயதான குமார் என்பவர், கடந்த 40 வருடங்களாக எல்.ஐ.சி. முகவராகப் பணிபுரிந்து வருகிறார். இவர் அதே பகுதியில் உள்ள இந்தியன் வங்கி கிளையில் சேமிப்புக் கணக்கு வைத்துள்ளார். இந்த நிலையில், குமார் கடந்த நான்கு ஆண்டுகளுக்கு முன்பு ரூ.2 லட்சம் வைப்பு நிதியாக (டெபாசிட்) வங்கியில் முதலீடு செய்திருந்தார்.

டெபாசிட் காலம் முடிவடைந்ததை அடுத்து, கடந்த மாதம் வங்கிக்குச் சென்ற குமார், பணத்தைப் பெற்றுக் கொள்ளலாம் என்று அதிகாரிகள் கூறியதால், இரண்டு நாட்களுக்கு முன்பு தனது டெபாசிட் ரசீதைக் கொடுத்துப் பணத்தைக் கேட்டிருக்கிறார்.

வங்கி நிர்வாகத்தின் பதில்

அப்போது, வங்கி அலுவலர், "உங்களுடைய பெயரில் ரூ.1 லட்சத்து 80 ஆயிரம் ரூபாய் கடன் தொகை உள்ளது. ஆகையால், உங்கள் பணத்தைக் கொடுக்க முடியாது" என்று தெரிவித்ததாகக் கூறப்படுகிறது.

இதைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த குமார், தான் அப்படி எந்தக் கடனும் பெறவில்லை என்று வாதிட்டுள்ளார். ஆனால், வங்கி நிர்வாகம் முறையாக எந்தப் பதிலும் அளிக்காததால், மன உளைச்சலுக்கு ஆளான குமார், இது குறித்து முத்தியால்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

போலீசார் விசாரணை

புகாரின் பேரில் போலீசார் உடனடியாக இந்தியன் வங்கி கிளைக்கு நேரில் சென்று விசாரணை நடத்தினர். அப்போது, இதுகுறித்த முழு விவரங்களையும் இரண்டு தினங்களில் கூறுவதாக வங்கி நிர்வாகம் தெரிவித்ததாகக் கூறப்படுகிறது.

இதுகுறித்து முதியவர் குமார் ஊடகங்களிடம் பேசுகையில், "நான் கடந்த 40 வருடங்களாக நேர்மையாக எல்.ஐ.சி. முகவராகப் பணியாற்றி வருகிறேன். எனது வயதான காலத்தில் இந்த வைப்புத்தொகை கிடைக்கும் என்ற நம்பிக்கையில் இருந்தேன். நான் கடன் எதுவும் வாங்காத நிலையில், வங்கி அலுவலர்கள் என்னைப் மன உளைச்சலுக்கு ஆளாக்கினர். என் பணத்தை மீட்டுத் தருவார்கள் என்ற நம்பிக்கையில் இருக்கிறேன்" என்று வேதனையுடன் தெரிவித்தார்.

இந்தச் சம்பவம் குறித்துக் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருவதாகத் தெரிவித்தனர்.