முதியவர் மறுமணம்
திருவண்ணாமலையில் நெடுங்குளம் பகுதியைச் சேர்ந்தவர் 63 வயதான சித்த வைத்தியர் ராமநாதன். இவர் திருமணமாகி மூன்று மகள்கள் உள்ளனர். குடும்பத் தகராறு காரணமாக தனியாக வாழ்ந்து வரும் ராமநாதன் மறுமணம் செய்வதற்காக செய்தித்தாளில் விளம்பரம் செய்ததாக கூறப்படுகிறது.
இதைப் பார்த்து சென்னையை சேர்ந்த கீர்த்தி என்பவர் தொடர்பு கொண்டார். 57 வயதாகும் கீர்த்தி சித்த வைத்தியர் ராமநாதன் திருமணம் செய்து கொள்வதாகவும் உடன் வாழ்வதாகவும் ஆசை வார்த்தை காட்டியதாக தெரிகிறது. இதை நம்பி சென்னை வேளச்சேரியில் வாடகைக்கு வீட்டை எடுத்து ராமநாதன் தங்கினார்.
நகைகளை வாங்கி மோசடி
உடனடியாக திருமணம் செய்து கொள்வதாக கீர்த்தி சித்த வைத்தியர் ராமநாதன் சென்னைக்கு வருவதற்கு முக்கிய காரணம். சென்னைக்கு வந்த பிறகு கீர்த்தியை சந்தித்து பேசினார். பிறகு தி.நகரில் உள்ள பிரபல தங்க நகைக்கடைக்கு அழைத்து சென்று ராமாநாதன் நகை, திருமணத்திற்கு தேவையான பொருட்களை வாங்கி கொடுத்ததாக தெரிகிறது.
அதன் பின்பு ஆயிரம் விளக்கு பகுதியில் உள்ள அப்பல்லோ மருத்துவமனைக்கு கீர்த்தி அழைத்து சென்றார். தனது உறவினரை சந்திக்க போவதாக கூறி அழைத்துச் சென்றதாக தெரிகிறது. மருத்துவமனையின் வரவேற்பு அறையில் அமர வைத்து சித்த மருத்துவர் ராமநாதனிடம் 2 மணி நேரத்திதிற்கும் மேலாக கணவன் மனைவி போல பேசி உள்ளார். இந்நிலையில் கடைசி வரை கணவன் மனைவியாக வாழலாம் என கூறிவிட்டு கீர்த்தி பாத்ரூம் சென்றார். நீண்ட நேரமாக வரவில்லை.
மோசடி பெண் கைது
பிறகு விசாரித்தபோது தான் தான் ஏமாற்றப்பட்டதை தெரிந்து கொண்டார். அது குறித்து தேனாம்பேட்டை காவல் நிலையத்தில் சித்த மருத்துவர் ராமநாதன் புகார் அளித்தார். திருமணம் செய்து கொள்வதாக கூறி நாடகமாடி திருமணத்திற்கான நகைப் பொருட்களை வாங்கி ஏமாற்றி விட்டதாக புகார் அளித்தார். இரண்டு கிராம் தாலி மூக்குத்தி மெட்டி உள்ளிட்ட நகைகள் மற்றும் பணம் ஏமாற்றியதாக சித்த வைத்திய ராமநாதன் புகார் அளித்தார். அப்பல்லோ மருத்துவமனையில் உள்ள சிசிடிவி காட்சிகளை பார்க்கும் பொழுது கருப்பு மாஸ் அணிந்து சித்த வைத்தியருடன் பெண் இருப்பது தெரியவந்தது. மேலும் நகை வாங்கிச் சென்ற கடைகளுக்கும் போலீசார் சென்று சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தனர். இந்த நிலையில் அந்த பெண்ணின் செல்போனை எண் வைத்து போலீசார் ஆய்வு செய்தனர்.
விசாரணையில், அந்த பெண்ணின் உண்மையான பெயர் கீதா என்பதும் 57 வயதுடையவர் என்பதும் தெரிந்தது. அப்பல்லோ மருத்துவமனையில் தூய்மை பணியாளராக பணியாற்றி வருவது தெரிய வந்தது. சென்னை அரும்பாக்கத்தில் வசித்து வரும் கீதா முதல் திருமணம் செய்தவரை பிரிந்து 2வது திருமணம் செய்து கொண்டது போலீஸ் விசாரணையில் தெரிய வந்துள்ளது. இதையடுத்து 2 வது கணவரை போலீசார் பிடித்து விசாரணை நடத்தினர். இதன் பிறகு கீதாவை போலீசார் கைது செய்தனர்.
போலீஸ் விசாரணை
செய்திதாள்களில் மறுமணம் செய்ய விரும்பும் வயதான ஆண்கள் அளிக்கும் விளம்பரங்களை பார்த்து அவர்களை குறி வைத்து மோசடியில் ஈடுபடுவதாக கைதான கீதா வாக்குமூலம் அளித்துள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர். வயதானவர்களிடம் திருமண மோசடி செய்ததால் அவமானத்தால் போலீசிடம் போக மாட்டார்கள் என வீக்னஸை வைத்தே மோசடியை அரங்கேற்றியதாக கைதான கீதா வாக்குமூலம் அளித்துள்ளதாக கூறப்படுகிறது. கைதான கீதா இது போன்ற திருமண மோசடிகளை எத்தனை பேரிடம் செய்துள்ளார்? பாதிக்கப்பட்டவர்கள் எத்தனை பேர் என்பது குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.