Retired IPS Ravi About TVK Vijay : கோலிவுட்டின் மாஸ் ஹீரோவான தளபதி விஜய், விரைவில் சினிமாவில் இருந்து விலகி அரசியலில் தடம் பதிக்கவுள்ளார். இதற்காக தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கிய விஜய், அடுத்தடுத்து அதிரடி காட்டி வருகிறார். விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்துடன் கூட்டணி வைக்க, நாம் தமிழர் கட்சி சீமான் ரெடியாக உள்ளதாக தெரிகிறது. அதேபோல் முக்கியமான கட்சிகளில் இருந்தும் பல முன்னணி தலைவர்கள் இணையலாம் என அரசியல் விமர்சகர்கள் கூறி வருகின்றனர்.
இந்நிலையில், விஜய்யின் அரசியல் கட்சி குறித்து ஓய்வுப்பெற்ற ஐபிஎஸ் அதிகாரி ரவி கூறியது வைரலாகி வருகிறது. 1991 பேட்ச் ஐ.பி.எஸ் அதிகாரியான ரவி, தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டத்தில் ஏ.எஸ்.பி ஆக பணியைத் தொடங்கினார். அதனைத் தொடர்ந்து ஓசூரில் ஏ.எஸ்.பியாகவும், 1994ம் ஆண்டு எஸ்.பியாகவும் பதவி உயர்வுபெற்றார். பின்னர் ஒருங்கிணைந்த நாகப்பட்டினம், திருவாரூர் மாவட்டங்களில் பணியாற்றினார். திண்டுக்கல், சேலத்தில் டி.ஐ.ஜி ஆக பணியாற்றிய அவர், ஏராளமான சாதி கலவரங்களை தடுத்து அமைதியை நிலைநாட்டினார். சென்னையில் சட்டம், ஒழுங்கு இணை கமிஷனராகவும், போக்குவரத்து காவல் கூடுதல் கமிஷனராகவும் பணியாற்றியுள்ளார் ரவி. மேலும் இணை ஆணையராக ரவி பணியாற்றியபோது முக்கிய ரவுடிகள் மீது அதிரடி நடவடிக்கை எடுத்தார்.
இவ்வாறு பல பொறுப்புகளில் திறம்பட பணியாற்றிய ஐபிஎஸ் அதிகாரியான ரவி, 2022ம் ஆண்டு தாம்பரம் காவல் ஆணையராக வேலை பார்த்துக்கொண்டிருந்த போது ஓய்வுப் பெற்றார். அதன் பின்னர் சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக செயல்படும் ரவி, நெட்டிசன்களுக்கே தக் லைஃப் கொடுப்பதில் கில்லாடியாக இருக்கிறார். முக்கியமாக விஜய் கட்சியில் ரவி தான் போதை கடத்தல் தடுப்புப் பிரிவு அமைச்சர் என நெட்டிசன் ஒருவர் போட்ட கமெண்ட் ரொம்பவே வைரலானது. அதாவது விஜய்யின் பிறந்தநாளுக்கு ரவி வாழ்த்து சொல்லி போஸ்ட் ஒன்று போட, அங்கே வந்த நெட்டிசன் ஒருவர், வருங்கால போதை கடத்தல் தடுப்புப் பிரிவு அமைச்சர் ரவி என கமெண்ட்ஸ் செய்தார்.
இதனை ஜாலியாக எடுத்துக்கொண்ட ஐபிஎஸ் ரவி, அவன சொல்லி நிறுத்தங்களேன்டா என தக் லைஃப் ஆக பதிலடி கொடுத்திருந்தார். அதேபோல் ரவி ஐபிஎஸ்-இன் இன்னொரு பதிவில் கமெண்ட் செய்த நபர், அடுத்த முதலமைச்சர் என கலாய்த்திருந்தார். இதற்கும் ரவி ரொம்பவே ஃபன்னாக ரிப்ளே செய்திருந்தது நெட்டிசன்களிடம் கவனம் ஈர்த்தது. இந்த நிலையில் தான் விஜய் உடனான நட்பு குறித்து ஐபிஎஸ் ரவி மனம் திறந்துள்ளார். அதில், ”விஜய் என் வீட்டுக்கு பக்கத்தில் இருப்பதால் அவரை நன்றாக தெரியும். நல்ல நண்பர் தான், ரொம்ப அறிவார்ந்த மனிதர், எளிமையாக பேசுவார், சமூக உணர்வோடு பேசக் கூடியவர், அதுதான் அவரிடம் பிடித்தது” எனக் கூறியுள்ளார்.
மேலும், ”விஜய் பிறந்தநாளுக்கு வாழ்த்துத் தெரிவித்திருந்ததால், அதை வைத்து கட்சியில் இணைவதாக எல்லோரும் ட்ரெண்ட் செய்துவிட்டனர். அரசியல் என்பது ரொம்பவே சவாலான விஷயம். மக்களுக்கு சரியான செயல்திட்டங்களை வகுக்க வேண்டும் என்ற நிலை வரும் போது நாம் அரசியலுக்குப் போகலாம்” எனத் தெரிவித்துள்ளார். இதனால் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தில் ஐபிஎஸ் ரவி இணையலாம் என ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர். ஆனால், அவரது பேட்டியில் அதற்கு வாய்ப்பில்லை என்பதாகவே தெரிகிறது. இருப்பினும் பொருத்திருந்து பார்க்கலாம் என விஜய் ரசிகர்கள் கமெண்ட்ஸ் செய்து வருகின்றனர்.