சென்னையில் பணத்தை இரட்டிப்பு செய்து தருவதாக கூறி ஏமாற்றும் மோசடி கும்பலைச் சேர்ந்த இருவரை சென்னை போலீசார் அதிரடியாக கைது செய்துள்ளனர்.
ஐந்து லட்சம் கொடுத்தால் 10 லட்சம் தருவதாக கும்பல் ஒன்று ஏமாற்றி வருவதாகவும், வெற்று பேப்பர்களை நடுவில் வைத்து பணக்கட்டு போல் கொடுத்து மோசடி செய்வதாகவும் ஏமாற்றிய கும்பல் குறித்து ஒருங்கிணைந்த குற்றப்புலனாய்வு பிரிவு அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதனை அடுத்து அந்த கும்பல் தொடர்பான அவர்களை கையும் களவுமாக பிடிப்பதற்காக போலீசார் நாடகம் ஒன்றை அரங்கேற்றினர். பணத்தை இரட்டிப்பாக்கி தருவதாக கூறும் கும்பலின் தொலைபேசி எண்ணை தொடர்பு கொண்டு பணம் இரட்டிப்பாக்குவது குறித்து பேசி உள்ளனர். ஐந்து லட்ச ரூபாய் வரை பணம் விற்பதாகவும் அதை 10 லட்சமாக மாற்றி தரக் கோரி போலீசாரே நாடகமாடியுள்ளனர்
போலீசார் இவர்களை யாரும் இல்லாத இடத்திற்கு பணத்தை கைமாற்ற வருமாறு சொல்லி இருந்தனர். ஆனால் கூட்டமாக இருக்கும் இடங்களில் மட்டுமே பணத்தை கைமாற்றுவோம் என கும்பலை சேர்ந்தவர்கள் தெரிவித்துள்ளனர். அதன் அடிப்படையில் கோயம்பேடு பகுதியில் பயணிகளோடு பயணிகளாக பணத்தை மாற்ற வந்த இரண்டு நபர்களை போலீசார் கையும் களவுமாக பிடித்தனர்.
2 பேரை பிடித்து சோதனை செய்ததில் ரூ.48,500 மற்றும் 20 பண்டல்கள் கொண்ட ரூபாய் நோட்டு போல கட்டிங் செய்யப்பட்ட பேப்பர்கள் இருந்தது தெரிந்தது. இவர்களிடம் நடத்திய விசாரணையில், திருப்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த கார் ஓட்டுனர் ஆசிக், புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த ரியல் எஸ்டேட் தொழில் செய்து வரும் சண்முகவேல் என்பது தெரிந்தது.
இவர்கள் ரூபாய் ஐந்து லட்சம் தொகை கொடுத்தால் பத்து லட்சம் இரட்டிப்பு தொகை தருவதாக ஆசை வார்த்தை சொல்லி நம்ப வைத்து மோசடியில் ஈடுபட முயன்றது தெரிந்தது.
பண கட்டுகளில் முன்புறமும், பின்புறமும் அசல் 500 ரூபாய் நோட்டுகளை வைத்து இடையே, கட்டிங் பிளைன் பேப்பர்களை வைத்து ரூபாய் கட்டுகளைப் போல காட்டி அசல் பணம் பெற்றுக்கொண்டு வெற்றி தாள்களை கொடுத்து ஏமாற்றி செல்ல முயன்றது தெரிய வந்தது.
இதையடுத்து, 2 பேரையும் கைது செய்து சிஎம்பிடி காவல் நிலையத்தில் ஒருங்கிணைந்த குற்றப்புலனாய்வு பிரிவினர் ஒப்படைத்தனர். தற்போது சிஎம்பிடி போலீசார் 2 பேரையும் கைது செய்து யாரெல்லாம் மோசடி செய்து ஏமாற்றி உள்ளார்கள்? எத்தனை வழக்குகள் உள்ளது? என்பது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.