தமிழ்நாடு

மீண்டும் உருவாகும் புயல் சின்னம்..?  அச்சத்தில் மக்கள்

டிசம்பர் 20-ஆம் தேதிக்கு பிறகு புயல் சின்னம் மீண்டும் உருவாகுவதற்கான வாய்ப்பு உள்ளதாக தனியார் வானிலை ஆய்வாளர் ஹேமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

மீண்டும் உருவாகும் புயல் சின்னம்..?  அச்சத்தில் மக்கள்
டிசம்பரில் 20-ஆம் தேதிக்கு பிறகு மீண்டும் புயல் சின்னம் உருவாக வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால் பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது. இதனிடையே வங்கக்கடலில் உருவான குறைந்த காற்றழுத்தத் தாழ்வு பகுதி, தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றது. அதனைத் தொடர்ந்து தீவிர காற்றழுத்த தாழ்வு மண்டலமாகவும் வலுவடைந்து இலங்கை மற்றும் டெல்டா கடலோரப் பகுதிகளையொட்டி நிலை கொண்டு இருந்தது. 

இந்த தீவிர காற்றழுத்த தாழ்வு மண்டலம் நேற்று முற்பகலில் புயலாக மாறக்கூடும் என தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, தென்மேற்கு வங்க கடலில் நிலவி வரும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நகராமல் ஒரே இடத்தில் மையம் கொண்டுள்ளது. 

இந்நிலையில், தனியார் வானிலை ஆய்வாளர் ஹேமச்சந்திரன் குமதம் செய்திகளுக்கு அளித்துள்ள பிரத்யேக பேட்டியில்,  வட இலங்கை மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமானது நிலவி வருகிறது. இது தற்பொழுது புயலாக மையம் கொண்டுள்ளது. இந்த புயல் நாளை காலை வரை அதே பகுதியில் நிலை கொண்டிருக்கும். பிறகு இது மேற்கு வட மேற்கு திசையில் நகர தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இலங்கையின் நிலப்பரப்பு ஊடுருவல் மற்றும் பல்வேறு வானிலை காரணிகள் காரணமாகவும் பசுபிக் உயரழுத்தம் மற்றும் அரேபிய உயரழுத்தம் போன்ற பல்வேறு வானிலை காரணிகள் இதன் தொடர்பில் இருப்பதன் காரணமாகவும் காற்றழுத்த தாழ்வு மண்டலம் அதே இடத்தில் மையம் கொண்டுள்ளது.  இதன் காரணமாகவே புயல் நகர்வதில் சற்று தாமதம் ஏற்பட்டுள்ளது.


கடந்த 36 மணி நேரமாக காற்று தற்பொழுது நிலை கொண்டுள்ள புயலுக்கு சாதகமாக இல்லை. இன்று இரவு முதல் இது சாதகமாக மாறுவதற்கான சூழல் உருவாகும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில் புயல் தீவிரமடைவதற்கான வாய்ப்பு உள்ளது.

புயலானது எதிர்பார்த்த இடத்தை விட சற்று கிழக்கே மையம் கொண்டுள்ளதன் காரணமாக தமிழ்நாட்டில் டெல்டா மாவட்டங்களில் அறிவிக்கப்பட்ட ரெட் அலர்ட் திரும்ப பெறப்பட்டுள்ளது. வரும் நாட்களில் இப்புயல் கரையை நெருங்கும் போது தமிழகத்தில் வடக் கடலோர மாவட்டங்களில் ரெட் அலர்ட் விடுக்கப்படுவதற்கான வாய்ப்பு உள்ளது.

அந்த வகையில் வரும் நாட்களில் சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், கடலூர், புதுச்சேரி, விழுப்புரம் ஆகிய மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் கொடுக்கப்படுவதற்கான வாய்ப்பு உள்ளது. புயல் ஆனது கரையை கடக்கும் பகுதிகளில் சற்று தீவிர மழைக்கு வாய்ப்புள்ளதால் அப்பகுதியில் வசிக்கும் மக்கள் முன்னெச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். 

புயலானது ஒரே பகுதியில் மையம் கொண்டுள்ளதன் காரணமாக சென்னை உள்ளிட்ட கடலோரப் பகுதிகளில் கடல் சீற்றத்துடன் காணப்பட்டு வருகிறது. வரும் மூன்று நாட்களுக்கு கடல் கொந்தளிப்பு அதிகமாகவே காணப்படும் என்பதால் கடல் நீர் ஊருக்குள் புகும் வாய்ப்பு உள்ளது. மேலும் மீனவர்கள் கடலுக்கு செல்லாமல் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். டிசம்பர் 20-ஆம் தேதிக்கு பிறகு புயல் சின்னம் மீண்டும் உருவாவதற்கான வாய்ப்பு உள்ளது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.