தமிழ்நாடு

தி.மு.க. விழாவுக்குச் சென்ற தனியார் பேருந்துகள்: அரசுப் பேருந்தில் ‘உறங்கிய’ ஊழியர்களால் பொதுமக்கள் அவதி!

தி.மு.க.வின் முப்பெரும் விழாவுக்குக் கரூர் சென்ற தனியார் பேருந்துகளால், கோவை மாநகரில் இன்று பொதுமக்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகினர். பேருந்து கிடைக்காமல் பொதுமக்கள் தவித்துக் கொண்டிருந்தபோது, அரசுப் பேருந்து ஒன்றின் ஓட்டுநரும், நடத்துநரும் உள்ளே உறங்கிக்கொண்டிருந்த சம்பவம், பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

 தி.மு.க. விழாவுக்குச் சென்ற தனியார் பேருந்துகள்: அரசுப் பேருந்தில் ‘உறங்கிய’ ஊழியர்களால் பொதுமக்கள் அவதி!
தி.மு.க. விழாவுக்குச் சென்ற தனியார் பேருந்துகள்: அரசுப் பேருந்தில் ‘உறங்கிய’ ஊழியர்களால் பொதுமக்கள் அவதி!
கோவை மாநகரில் உள்ள ஆறு பேருந்து நிலையங்களிலிருந்து, நாள்தோறும் லட்சக்கணக்கான மக்கள் உள்ளூர் மற்றும் வெளியூர்களுக்குப் பயணம் செய்கின்றனர். இந்நிலையில், இன்று கரூர் மாவட்டத்தில் நடைபெற்ற தி.மு.க.வின் முப்பெரும் விழாவிற்காக, போக்குவரத்து விதிமுறைகளை மீறி, உரிய அனுமதி பெற்ற தனியார் பேருந்துகள் பல வாடகைக்கு எடுக்கப்பட்டுச் சென்றன. இதனால், பயணிகளின் பயன்பாட்டிற்கான பேருந்துகள் பற்றாக்குறை ஏற்பட்டு, கோவை பேருந்து நிலையங்களில் மக்கள் நீண்ட நேரம் காத்திருக்க நேர்ந்தது.

குறிப்பாக, காந்திபுரம் பேருந்து நிலையத்தில், ஆனைகட்டிக்குச் செல்லப் பேருந்து இன்றி பொதுமக்கள் தவித்துக்கொண்டிருந்த நிலையில், அங்கு ஒரு அரசுப் பேருந்து நின்று கொண்டிருந்தது. ஆனால், அதன் கதவுகள் பூட்டப்பட்டு இருந்தன. பொறுமை இழந்த மக்கள் பேருந்தின் ஜன்னல் வழியாகப் பார்த்தபோது, உள்ளே ஓட்டுநர் மற்றும் நடத்துனர் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்ததைக் கண்டு ஆத்திரமடைந்தனர். அவர்கள் சத்தம் போட்டு, ஊழியர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

நகைச்சுவை நடிகர் வடிவேலு திரைப்பட பாணியில், ’அரசு உத்தியோகம், உணவு இடைவேளை, ஒரு மணி நேரம் தூக்கம்’ என்று கேலி செய்த பொதுமக்கள், ஊழியர்களின் அலட்சியத்தைக் கண்டித்தனர். பொதுமக்களின் கடும் சத்தத்தால் விழித்தெழுந்த ஊழியர்கள், பின்னர் ஒரு வழியாக மக்களைப் பேருந்திற்குள் அனுமதித்தனர். இந்தச் சம்பவத்தால், காந்திபுரம் பேருந்து நிலையத்தில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.