தமிழ்நாடு

Pollachi Case: 9 பேருக்கு சாகும் வரை ஆயுள் தண்டனை.. பொள்ளாச்சி பாலியல் வழக்கு கடந்து வந்த பாதை!

தமிழ்நாட்டையே உலுக்கிய பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கில் குற்றவாளிகளான 9 பேருக்கும் சாகும் வரை ஆயுள் தண்டனை வழங்கி கோவை கூடுதல் மகளிர் நீதிமன்ற நீதிபதி நந்தினி தேவி தீர்ப்பளித்துள்ளார்.

Pollachi Case: 9 பேருக்கு சாகும் வரை ஆயுள் தண்டனை.. பொள்ளாச்சி பாலியல் வழக்கு கடந்து வந்த பாதை!
பொள்ளாச்சி பாலியல் வழக்கு கடந்து வந்த பாதை
கோவை மாவட்டம், பொள்ளாச்சியில் கடந்த 2019 ஆம் ஆண்டு கல்லூரி மாணவிகள் மற்றும் இளம் பெண்களை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்து, வீடியோவாக எடுத்த சம்பவம் தமிழ்நாட்டில் மிகப்பெரிய பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், இதில் பாதிக்கப்பட்ட இளம் பெண்கள் அழுது கதறும் வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி பொதுமக்களை அதிர்ச்சியை ஏற்படுத்தியது. தமிழகத்தின் அனைத்து தரப்பிலும் இருந்து எதிர்ப்புகள் வந்த நிலையில், தமிழகம் முழுவதும் பாலியல் வன்கொடும சம்பவத்தை கண்டித்து போராட்டங்கள் நடைபெற்றது.

சிபிஐக்கு மாற்றப்பட்ட வழக்கு:

இந்த வழக்கில், பாதிக்கப்பட்ட இளம் பெண்கள் பொள்ளாச்சி டவுன் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். முதலில் இந்த வழக்கை, பொள்ளாச்சி கிழக்கு போலீசார் விசாரித்த நிலையில், பின்னர் சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரித்தனர். பின்னர் இந்த வழக்கு சி.பி.ஐ.க்கு மாற்றம் செய்யப்பட்டது. சி.பி.ஐ. அதிகாரிகள் அதிரடி விசாரணை மேற்கொண்டு இவ்வழக்கில், பொள்ளாச்சியை சேர்ந்த திருநாவுக்கரசு (வயது 25), சபரிராஜன் (25), வசந்தகுமார் (27), சதீஷ் (28), மணிவண்ணன் (25) ஆகிய 5 பேர் 2019ல் கைது செய்யப்பட்டனர். ஹேரேன் பால் (29), பாபு என்கிற பைக் பாபு (34), அருளானந்தம் (34), அருண்குமார் ஆகிய 4 பேர் கடந்த 2021ல் கைது செயத நிலையில், இந்த வழக்கில் குற்றவாளிகளின் எண்ணிக்கை 9 ஆக உயர்ந்தது. மேலும், கைது செய்யப்பட்ட குற்றவாளிகள் 9 பேரும் சிறையில் அடைக்கப்பட்டனர்.

வழக்கு விவரம்:

இவர்கள் மீது பாலியல் வன்கொடுமை, அத்துமீறல், ஆள் கடத்தல், அடைத்து வைத்து துன்புறுத்துதல், கூட்டுச்சதி, தடயங்கள் அழிப்பு, ஆபாச வீடியோ எடுத்தல், ஆபாச வீடியோக்களை பகிறுதல் உட்பட 13 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது. கைது செய்யப்பட்ட ஒன்பது பேரும் சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர். இவர்கள் மீது 2019 ஆம் ஆண்டு மே 21 ஆம் தேதி கோவை மகளிர் சிறப்பு நீதிமன்றத்தில் வழக்கு நடந்து வந்தது. கோவை மகளிர் நீதிமன்றத்தில் சி.பி.ஐ குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்தது. அதன் பிறகு வழக்கு விசாரணை தாமதமானது. அதைத் தொடர்ந்து உயர் நீதிமன்றம் உத்தரவின் பேரில் கோவை ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் தனியாக அறை ஒதுக்கி விசாரணை தீவிரப்படுத்தப்பட்டது.

விசாரணை விவரம்:

இவர்கள் மீதான வழக்கு விசாரணை கோவை சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இவ்வழக்கில், 50-க்கும் மேற்பட்ட அரசுத்தரப்பு சாட்சிகள் விசாரிக்கப்பட்டதாகவும், சுமார் 200 ஆவணங்கள், 40 மின்னணு தரவுகள் உள்பட பறிமுதல் செய்யப்பட்ட அனைத்து பொருட்களும் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

பாதிக்கப்பட்டவர்கள் 8 பேர், விசாரணையின்போது குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு எதிராக சாட்சியம் அளித்துள்ளனர். இவ்வழக்கில், ஒவ்வொரு வாயுதாவின்போதும், குற்றம்சாட்டப்பட்ட 9 பேரும் சேலம் சிறையில் இருந்தபடியே வீடியோ கான்பரன்சிங் மூலம் நீதிபதி முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டு வந்தனர்.

இவ்வழக்கில், அரசு தரப்பு சாட்சியங்கள் நிறைவடைந்ததையடுத்து, கைதான 9 பேரிடம் சட்ட விதிகள் 313-ன் கீழ் கேள்விகள் கேட்பதற்கு கோர்ட்டில் ஆஜர்படுத்தும்படி நீதிபதி உத்தரவிட்டார். அதன்படி, திருநாவுக்கரசு உள்பட 9 பேரும் கடந்த 5ம் தேதி சேலத்தில் இருந்து பலத்த போலீஸ் பாதுகாப்புடன் அழைத்து வரப்பட்டு, கோவை சிபிஐ நீதிமன்றத்தில், நீதிபதி ஆர்.நந்தினிதேவி முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டனர். அப்போது, ஒவ்வொருவரிடமும் சுமார் 50 கேள்விகள் கேட்கப்பட்டன. இதற்கு அவர்கள் எழுத்துப்பூர்வமாக பதிலளித்தனர். இந்த நடைமுறை வீடியோவில் பதிவு செய்யப்பட்டது.

சாகும் வரை ஆயுள் தண்டனை

இதைதொடர்ந்து வழக்கு விசாரணை சூடுபிடித்தது. அரசு விடுமுறை தினங்கள் தவிர்த்து, இதர நாட்கள் அனைத்திலும் குறுக்கு விசாரணை, இரு தரப்பு வக்கீல்கள் வாதம் தொடர்ச்சியாக நடந்து வந்தது. இந்நிலையில், கடந்த மாதம் 28ம் தேதி மீண்டும் வழக்கு விசாரணைக்கு வந்தபோது, நீதிபதி ஆர்.நந்தினிதேவி கோர்ட்டில் சமர்ப்பிக்கப்பட்ட ஆவணங்கள் சரிபார்ப்பு, சாட்சி விசாரணை, குறுக்கு விசாரணை என அனைத்தும் நிறைவுபெற்றுவிட்டதால், இவ்வழக்கில் மே 13 அன்று தீர்ப்பு அளிக்கப்படுவதாக அறிவித்தார்.

இந்தநிலையில் குற்றவாளிகள் 9 பேரின் தண்டனை விவரங்களை நீதிபதி நந்தினி தேவி வாசித்தார். பொள்ளாச்சி பாலியல் வழக்கு குற்றவாளிகள் 9 பேருக்கும் சாகும் வரை ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளித்தார். மேலும், குற்றம்சாட்டப்பட்ட 9 பேரையும் கோர்ட்டில் நேரில் ஆஜர்படுத்த வேண்டும் என்றும் நீதிபதி உத்தரவிட்டார். இதையடுத்து கடந்த 6 ஆண்டுகளாக நடந்து வந்த இவ்வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

85 லட்சம் இழப்பீடு:

பாதிக்கப்பட்ட பெண்களுக்கு மொத்தமாக ரூ.85 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும். பாதிக்கப்பட்ட பெண்களுக்கு ரூ.10 லட்சம், ரூ.15 லட்சம் என வழங்க வேண்டும் என்று நீதிபதி உத்தரவிட்டார்.

தண்டனை விவரம்:

பொள்ளாச்சி வழக்கில், குற்றவாளிகளுக்கு வழங்கப்பட்ட தண்டணை விவரம்:

முதல் குற்றவாளியான சபரிராஜனுக்கு 4 ஆயுள் தண்டனை

2-வது குற்றவாளியான திருநாவுக்கரசருக்கு 5 ஆயுள் தண்டனை

3-வது குற்றவாளியான சதீஷூக்கு 3 ஆயுள் தண்டனை

4-வது குற்றவாளியான வசந்தகுமாருக்கு 2 ஆயுள் தண்டனை

5-வது குற்றவாளியான மணிவண்ணனுக்கு 5 ஆயுள் தண்டனை

6-வது குற்றவாளி பாபு-க்கு 1 ஆயுள் தண்டனை

7-வது குற்றவாளியான ஹெரன்பால்-க்கு 3 ஆயுள் தண்டனை

8-வது குற்றவாளியான அருளானந்தம் 1 ஆயுள் தண்டனை

9-வது குற்றவாளியான அருண்குமார் 1 ஆயுள் தண்டனை


சிபிஐ வழக்கறிஞர் பேட்டி:

இதுகுறித்து செய்தியாளர்களை சந்தித்த சிபிஐ தரப்பு வழக்கறிஞர் சுரேந்திர மோகன் பேசுகையில், பொள்ளாச்சி பாலியல் வழக்கில் சிறப்பான தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளதாகவும், நீதிமன்ற காவலில் உள்ள ஒன்பது பேருக்கும் சாகும் வரை ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளதாகவும், மேலும் பாதிக்கப்பட்டு சாட்சியளித்த பெண்களுக்கு மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு சார்பில் 85 லட்சம் ரூபாய் நிவாரணத் தொகை வழங்கப்படும் எனவும், இந்த வழக்கில் நேரடி சாட்சியங்கள் மற்றும் மின்னணு சாட்சியங்கள் சிறப்பாக முன்வைக்கப்பட்டு தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளதாகவும் கூறினார். மேலும் சிபிஐ விசாரணை துவங்கியது முதல் பாதிக்கப்பட்ட பெண்களின் அடையாளங்கள் பாதுகாக்கப்பட்டு உரிய வகையில் வழக்கு நடத்தப்பட்டதாகவும் அவர் கூறினார்.

இனிப்பு வழங்கி கொண்டாட்டம்:

காலை 10 மணி அளவில் செய்தியாளர்களை சந்தித்த சிபிஐ தரப்பு அரசு வழக்கறிஞர் சுரேந்திர மோகன், குற்றம் சாட்டப்பட்ட 9 பேரும் குற்றவாளிகள் என தீர்ப்பளிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார். இதனைத் தொடர்ந்து குற்றவாளிகள் என அறிவிக்கப்பட்ட தீர்ப்பினை வரவேற்று நீதிமன்ற வளாகத்தில் மாதர் சங்கத்தினர் இனிப்புகள் வழங்கி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

குற்றவாளிகளின் வழக்கறிஞர் பேட்டி:

இதனை அடுத்து செய்தியாளர்களை சந்தித்த கைது செய்யப்பட்டவர்கள் தரப்பு வழக்கறிஞர் பாண்டியராஜன் பேசுகையில், தீர்ப்பினை எதிர்த்து உச்சநீதிமன்றத்தை அணுக உள்ளதாக தெரிவித்தனர். இதில், கைது செய்யப்பட்ட 9 பேர் மீது பாலியல் வன்கொடுமை, கூட்டுச்சதி உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் சிபிஐ வழக்குப்பதிவு செய்து, கோவை சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வந்தது.