தமிழ்நாடு

சிறப்பு உதவி ஆய்வாளர் சண்முகவேல் கொலை: முதல்வர் ஸ்டாலின் நிதியுதவி அறிவிப்பு!

திருப்பூரில் காவல் சிறப்பு உதவி ஆய்வாளர் சண்முகவேல் கொலை செய்யப்பட்டது தமிழகத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சிறப்பு உதவி ஆய்வாளர் சண்முகவேல் கொலை: முதல்வர் ஸ்டாலின் நிதியுதவி அறிவிப்பு!
சிறப்பு உதவி ஆய்வாளர் சண்முகவேல் கொலை: முதல்வர் ஸ்டாலின் நிதியுதவி அறிவிப்பு
திருப்பூர் மாவட்டம், குடிமங்கலம் காவல் நிலையத்தில் சிறப்பு உதவி ஆய்வாளராகப் பணிபுரிந்து வந்தவர் சண்முகவேல் (57). இவர் ஆயுதப்படை காவலர் அழகுராஜாவுடன் நேற்று (ஆகஸ்ட் 5 ) அன்று இரவு ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது, அதிமுக எம்எல்ஏ மகேந்திரனின் தோட்டத்தில் தகராறு நடப்பதாக 100 என்ற எண்ணுக்கு அழைப்பு வந்துள்ளது.

சம்பவ இடத்திற்குச் சென்று விசாரித்தபோது, அங்குத் தந்தை மூர்த்திக்கும், மகன் தங்கபாண்டிக்கும் இடையே சண்டை நடந்துள்ளது. அப்போது தங்கபாண்டியை, அவரது தந்தை மூர்த்தி அரிவாளால் வெட்ட முயன்றபோது, சண்முகவேல் அதைத் தடுக்க முயன்றார். இதனால் ஆத்திரமடைந்த தங்கபாண்டி, சண்முகவேலை அரிவாளால் சரமாரியாக வெட்டியுள்ளார். இதில் சண்முகவேல் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். அவருடன் சென்ற காவலர் அழகுராஜாவுக்கும் லேசான காயம் ஏற்பட்டது.

இந்தச் சம்பவம்குறித்து அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார், சண்முகவேலின் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இந்தக் கொலை தொடர்பாக 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டு, குற்றவாளிகளைத் தேடி வருகின்றனர். தற்போது வரை குற்றவாளிகள் மூன்று பேர் தலைமறைவாக உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

முதல்வரின் இரங்கல் அறிக்கை

சிறப்பு உதவி ஆய்வாளர் சண்முகவேலின் மரணம்குறித்து முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில், "இந்தத் துயரச் செய்தியைக் கேட்டு மிகுந்த அதிர்ச்சியும் வேதனையுமடைந்தேன். சண்முகவேலின் உயிரிழப்பு தமிழ்நாடு காவல்துறைக்கும் அவரது குடும்பத்தினருக்கும் ஈடுசெய்ய முடியாத பேரிழப்பு. இந்தக் கொடூரச் செயலில் ஈடுபட்ட குற்றவாளிகளை விரைந்து கைதுசெய்ய உத்தரவிட்டுள்ளேன். அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக்கொள்கிறேன். மேலும், அவரது குடும்பத்தினருக்கு ஒரு கோடி ரூபாய் நிவாரண நிதி வழங்கிடவும் உத்தரவிட்டுள்ளேன்" என்று குறிப்பிட்டுள்ளார்.