தமிழ்நாடு

சென்னையில் 52 கோடி மதிப்பில் பூங்காக்கள்- அமைச்சர் கே.என்.நேரு அறிவிப்பு

எந்த இடத்திலும் அம்மா உணவகம் நிறுத்தப்படவில்லை என அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்தார்

சென்னையில் 52 கோடி மதிப்பில் பூங்காக்கள்- அமைச்சர் கே.என்.நேரு அறிவிப்பு
அமைச்சர் கே.என்.நேரு

தமிழக சட்டப்பேரவையில் நகராட்சி நிருவாகத்துறை மானியக்கோரிக்கை மீதான விவாதத்தில்போது பேசிய அமைச்சர் கே.என்.நேரு, “சென்னை மாநகராட்சி பகுதிகளில் நிலத்தடி நீர்மட்டத்தை உயர்த்த 52 கோடி மதிப்பில் பூங்காக்கள் மற்றும் பொது இடங்களில் மழைநீர் சேகரிப்பு கட்டமைப்புகள் அமைக்கப்படும். 

உயர்தர வணிக வளாகங்கள் கட்டப்படும்

சென்னை மாநகராட்சி பகுதிகளில் உள்ள ஏரிகள் மற்றும் குளங்களை மறுசீரமைத்து நீர்நிலைகளின் கொள்ளளவை அதிகரிக்கவும், அதனை சுற்றிய பகுதிகளில் வெள்ள பாதிப்பினை தவிர்க்கவும் 120 கோடி மதிப்பில் பணிகள் மேற்கொள்ளப்படும்.

Read more: ஆம்புலன்சில் வந்து தேர்வெழுதிய மாணவர்- நெகிழ்ந்து போன ஆசியர்கள்

சென்னை மாநகராட்சியில் இயற்கை சூழலை ஏற்படுத்த 60 கோடி மதிப்பில் 30 புதிய பூங்காக்கள் அமைக்கப்படும். சென்னையின் அனைத்து மண்டலங்களிலும் 45 கோடி மதிப்பில் உள்விளையாட்டு அரங்கங்கள் அமைக்கப்படும்.சென்னை மாநகராட்சியின் முக்கிய இடங்களில் பொது மற்றும் தனியார் துறை பங்களிப்புடன் நவீன வசதிகளுடன் கூடிய உயர்தர வணிக வளாகங்கள் கட்டப்படும்” என தெரிவித்தார்.

அம்மா உணவகம் நிறுத்தப்படவில்லை

அதேபோல், அதிமுக சட்டமன்ற உறுப்பினர் எஸ்.பி.வேலுமணி, அம்மா உணவகத்தை தொடர்ந்து செயல்படுத்த வேண்டும் என்று தெரிவித்தார். இதற்கு பதில் அளித்த அமைச்சர் கே.என்.நேரு, எந்த இடத்திலும் அம்மா உணவகம் நிறுத்தப்படவில்லை. இப்போது கூட 40 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மழைக்காலத்தில் இந்த அம்மா உணவகத்தில் இலவச உணவு வழங்க முதல்வர் உத்தரவிட்டதாக பதில் அளித்தார்.