தமிழ்நாடு

'தமிழகத்தில் வேறு மொழிகள் திணிக்கப்படவில்லை'- மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் விளக்கம்!

மத்திய அரசின் சமக்ர சிக்ஷா திட்டத்திற்கான நிதியை வழங்க, மத்திய அரசின் ஒப்பந்தத்தை தமிழக அரசு ஏற்க வேண்டும் என மத்திய கல்வித் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் தெரிவித்துள்ளார்.

'தமிழகத்தில் வேறு மொழிகள் திணிக்கப்படவில்லை'- மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் விளக்கம்!
Central Minister Dharmendra Pradhan
மத்திய அரசின் சமக்ர சிக்ஷா திட்டத்திற்கான நிதியை வழங்க, மத்திய அரசின் ஒப்பந்தத்தை தமிழக அரசு ஏற்க வேண்டும் என மத்திய கல்வித் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் தெரிவித்துள்ளார். மாணவர்களின் நலனை விட அரசியலுக்கு முக்கியத்துவம் தர வேண்டாம் என்றும் அவர் தமிழக அரசுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

சென்னை ஐஐடியில் நடந்த நிகழ்ச்சியில் ஒன்றில் மத்திய கல்வித் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் கலந்துகொண்டார். இதையடுத்து, செய்தியாளர்களைச் சந்த்தித்து அவர் பேசியதாவது:

சமக்ர சிக்ஷா கல்வி நிதி

"மத்திய அரசின் ஒப்பந்தத்தை ஏற்றால்தான் சமக்ர சிக்ஷா கல்வி நிதியை வழங்க முடியும். மாணவர்களின் நலனைவிட உங்களின் அரசியலுக்கு முக்கியத்துவம் தராதீர்கள். நான் அனைத்து விதமான ஒத்துழைப்பையும் வழங்கத் தயாராக இருக்கிறேன். கல்வி நிதி குறித்து தமிழகத்திலும், நாடாளுமன்றத்திலும் நான் பேசி இருக்கிறேன். இந்த விவகாரத்தில் தமிழக அரசு அரசியல் செய்ய வேண்டாம், அரசியல் நிலைப்பாட்டைத் திணிக்கக் கூடாது."

மும்மொழிக் கொள்கை குறித்து விளக்கம்

மும்மொழிக் கொள்கை குறித்துப் பேசிய அவர், "தமிழகத்தில் மாநிலப் பாடத்திட்டப் பள்ளிகளில் ஏற்கெனவே தமிழ், ஆங்கிலம், தெலுங்கு, உருது, மலையாளம் எனப் பல மொழிகள் பயிற்றுவிக்கப்படுகிறது. நாங்கள் மூன்றாவது மொழியாக ஏதாவது ஒரு மொழியைப் படிக்கச் சொல்கிறோம். தமிழகத்தில் வேறு மொழிகளை நாங்கள் திணிக்கவில்லை. பல மாநிலங்கள் மும்மொழிக் கொள்கையைப் பின்பற்றுகின்றன. உதாரணமாக, உத்தரப் பிரதேச மாணவர்கள் விரும்பினால், இந்தி, ஆங்கிலம் ஏன் தமிழ் கூடக் கற்கலாம்" என்றார்.

"மொழியை வைத்துப் பிரிவினையை ஏற்படுத்தியவர்கள் தோற்று இருக்கிறார்கள். சமூகம் அனைத்தையும் தாண்டி வளர்ந்துள்ளது. மாணவர்களின் நலனைவிட அரசியலுக்கு முக்கியத்துவம் கொடுப்பது சரியானது அல்ல" என்றும் அவர் குறிப்பிட்டார்.