தமிழ்நாடு

நாஞ்சில் விஜயன் மீது பாலியல் புகார்: சர்ச்சைக்குப் பதிலளித்த நாஞ்சில் விஜயன், மரியா தம்பதியினர்!

நகைச்சுவை நடிகர் நாஞ்சில் விஜயன், திருநங்கை வைஷு என்பவர் அளித்த பாலியல் மற்றும் மோசடிப் புகார் தொடர்பாக, தன் மனைவி மரியாவுடன் இணைந்து வீடியோ ஒன்றை வெளியிட்டு கண்ணீர் மல்க விளக்கம் அளித்துள்ளனர்.

நாஞ்சில் விஜயன் மீது பாலியல் புகார்: சர்ச்சைக்குப் பதிலளித்த நாஞ்சில் விஜயன், மரியா தம்பதியினர்!
நாஞ்சில் விஜயன் மீது பாலியல் புகார்: சர்ச்சைக்குப் பதிலளித்த நாஞ்சில் விஜயன், மரியா தம்பதியினர்!
தனியார் தொலைக்காட்சியில் நகைச்சுவை நடிகராகப் பிரபலமடைந்த நாஞ்சில் விஜயன், பெண் வேடமிட்டு ரசிகர்களின் மத்தியில் தனக்கென ஓர் இடத்தைப் பிடித்தவர். இவருக்கு மரியா என்ற மனைவியும், ஒரு பெண் குழந்தையும் உள்ளனர்.

திருநங்கை வைஷுவின் புகார்

இந்நிலையில், திருநங்கை வைஷு என்பவர் சமீபத்தில் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் நாஞ்சில் விஜயன் மீது ஒரு புகார் அளித்தார். அதில், கடந்த 15 ஆண்டுகளாக நான் தனியார் தொலைக்காட்சியில் பணிபுரிந்து வருகிறேன். கடந்த 5 ஆண்டுகளாக நானும், நாஞ்சில் விஜயனும் காதலித்து வந்தோம். தன்னைத் திருமணம் செய்து கொள்வதாகக் கூறி பாலியல் ரீதியாகவும் பயன்படுத்திக் கொண்டார்.

திருமணம் ஆன பிறகும் என்னுடன் பழகி வந்தவர், ஆறு மாதங்களுக்கு முன்பு நாங்கள் இருவரும் ஒரு ரிசார்ட்டிற்குச் சென்றோம். அதன் பிறகு, நமது பழக்கத்தை நிறுத்திக்கொள்வோம், வீட்டில் அடிக்கடி சண்டை வருகிறது என்று கூறினார். இப்போது நான் ஒரு திருநங்கை என்ற காரணத்தைச் சுட்டிக்காட்டித் திருமணம் செய்ய மறுக்கிறார், என்று குற்றம்சாட்டியிருந்தார்.
நாஞ்சில் விஜயன், மரியா தம்பதியினர் விளக்கம்

இந்த விவகாரம் சமூக வலைதளங்களிலும், ஊடகங்களிலும் பெரும் விவாதப் பொருளாக மாறியுள்ளது. இதற்குப் பதிலளிக்கும் விதமாக, நாஞ்சில் விஜயன் தன் மனைவி மரியாவுடன் இணைந்து வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், மனைவி மரியா கண்ணீருடன், ஏன் வைஷு இப்படிச் செய்தீர்கள்? என் கணவரை ஏன் இப்படி இழிவுபடுத்தினீர்கள்? வெளியில தலை காட்ட முடியல. எங்க இரண்டு பேருக்குமிடையே பிரச்சனை ஏற்படுத்துவதற்காக இப்படிச் செய்கிறீர்களா? என்று உருக்கமாகக் கேட்டுள்ளார்.

நாஞ்சில் விஜயன் பேசுகையில், எனக்கும் வைஷுவிற்கும் எந்தவிதமான தொடர்பும் இல்லை. நான் அவரை ஒரு சகோதரி, தோழியைப் போல் தான் பார்த்தேன். என் மீது அவர் அவதூறுகளைப் பரப்பி வருகிறார், என்று மறுப்புத் தெரிவித்துள்ளார்.