ஈரோடு மாவட்டம் சிவகிரி விலாங்காட்டு வலசு கிராமத்தை சேர்ந்தவர் ராமசாமி கவுண்டர் (75) அவரது மனைவி பாக்கியம் (65). இவர்களுக்கு கவிசங்கர் மற்றும் பானுமதி என்ற ஒரு மகள் மற்றும் மகன் உள்ளனர். இவர்களது மகன் கவிசங்கர் முத்தூரில் மோட்டார் விற்பனை நிலையம் வைத்து நடத்தி வருகிறார். மகள் பானுமதிக்கு திருமணம் நடைபெற்று கணவர் குழந்தைகளுடன் வசித்து வரும் நிலையில். ராமசாமி கவுண்டர் அவரது மனைவி பாக்கியத்துடன் இதே பகுதியில் 35 ஆண்டுகளுக்கு மேலாக வாசித்து வருவதுடன் ஆடு மாடுகளை வைத்து விவசாயம் செய்து வருகிறார் .
இந்த நிலையில் தோட்டத்து வீட்டில் தனியாக வசித்து வந்த ராமசாமி கவுண்டர் கடந்த இரண்டு நாட்களாக வீட்டை விட்டு வெளியே வராமல் இருந்துள்ளார். மேலும், அவரது மகன் கவிசங்கர் செல்போன் மூலம் அழைத்தும் செல்போன் எடுக்காததால் அருகாமையில் உள்ள உறவினர்கள் மூலமாக வீட்டிற்குச் சென்று பார்க்கச் சொல்லி உள்ளார். அப்போது வீட்டில் துர்நாற்றம் வீசியதை தொடர்ந்து உடனடியாக காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
காவல்துறையினர் வந்து பார்த்தபோது தோட்டத்து வீட்டில் தனியாக வசித்து வந்த ராமசாமி கவுண்டர் மற்றும் அவரது மனைவி பாக்கியம் கொலை செய்யப்பட்டு உயிரிழந்து கிடப்பது தெரிய வந்துள்ளது. இதனைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் சுஜாதா மற்றும் மோப்பநாய் பிரிவினர் கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு தடயங்களை சேகரித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஏற்கனவே 2020- ம் ஆண்டு முதல் 2023- ம் ஆண்டு வரையில் சென்னிமலை காங்கேயம் அரச்சலூர் உள்ளிட்ட பகுதிகளில் நகைக்காக ஆதாய கொலைகள் நடைபெற்று உள்ள நிலையில், தற்போது தோட்டத்து வீட்டில் வசிக்கும் வயதான தம்பதியினர் கொலை செய்யப்பட்டிருப்பது நகைக்காகவா அல்லது வேறு ஏதேனும் காரணமா என்ற கோணத்தில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
காவல்துறையினர் நடத்திய விசாரணையில் கொலை செய்யப்பட்ட பாக்கியம் அணிந்திருந்த தாலிக்கொடி மற்றும் தங்கவளையல் உட்பட 12 பவுன் நகைகள் கொள்ளை போய் உள்ளது முதல் கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது . மேலும் வீட்டினுள் பீரோவில் ஏதேனும் நகைகள் கொள்ளை போய் உள்ளதா என்பதை குறித்தும் காவல் துறையினர் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்
இதுகுறித்து எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, காவல்துறை மானிய கோரிக்கையின் போது சட்டம் ஒழுங்கு சிறப்பாக உள்ளதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெருமை பேசியதாகவும், இது தான் சட்டம் ஒழுங்கு சிறப்பாக இருக்கும் லட்சணமா எனவும் கேள்வி எழுப்பியுள்ளார்.
பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில், வயதான தம்பதி கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியளிப்பதாக தெரிவித்துள்ளார். மீண்டும் மீண்டும் அரங்கேறி வரும் கொடூர சம்பவங்கள் நம்மை அச்சத்தில் உறைய வைப்பதோடு, திராவிட மாடல் ஆட்சியில் எவருக்கும் பாதுகாப்பில்லை என்ற உண்மை உணர்த்துவதாகவும் தெரிவித்துள்ளார்.
அதேபோல பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலையின் எக்ஸ் தள பதிவில், காவல்துறையைக் கையில் வைத்திருக்கும் முதலமைச்சர், அங்கொன்றும், இங்கொன்றுமாக ஒரு சில குற்றங்கள் மட்டுமே நடைபெறுகின்றன என்று சட்டமன்றத்தில் சாதாரணமாகக் கூறுகிறார். ஒரே பாணியில் தொடர் கொலைகள் நடப்பதுதான் அங்கொன்றும் இங்கொன்றுமா? என அண்ணாமலை கேள்வி எழுப்பினார்.
பாமக தலைவர் அன்புமணி ராமதாஸின் எக்ஸ் தள பதிவில், தமிழ்நாட்டில் அண்மைக்காலமாகவே பணம், நகைக்காக வயது முதிர்ந்த தம்பதிகள் படுகொலை செய்யப்படுவது அதிகரித்து வருவதாகவும், அடுத்தடுத்து நடக்கும் கொலைகளும், அதற்கு காரணமானவர்கள் கண்டுபிடிக்கப்படாததும் மக்கள் மத்தியில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளதாக தெரிவித்துள்ளார்.