சென்னை ஐயப்பன் தாங்கலில் இருந்து பிராட்வே செல்லக் கூடிய வழித்தடத்தில் தடம் எண் 26 எண் கொண்ட பேருந்து வழக்கம் போல் நேற்று (பிப். 10) பிராட்வே நோக்கி சென்று கொண்டிருந்தது. இந்த பேருந்து காலை வடபழனி அருகே சென்ற போது, அதில் ஐந்திற்கும் மேற்பட்ட இளைஞர்கள் ஏறியுள்ளனர். அவர்கள் தொடக்கம் முதலே ரகளையில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.
இதையடுத்து, பெண்கள் இருக்கையில் அமர்ந்திருந்த ஐந்திற்கும் மேற்பட்ட பெண்களை எழுப்பிவிட்டு அந்த இளைஞர்கள், இருக்கையில் அமர்ந்துள்ளனர். அதுமட்டுமல்லாமல், பெண்கள் இருக்கையில் அமர்ந்து கொண்டு தொடர்ந்து ரகளையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது பெண் ஒருவர் ஏன் பெண்கள் இருக்கையில் இருந்தவர்களை எழுப்பிவிட்டு விட்டு நீங்கள் அமர்ந்து இருக்கிறீர்கள் என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
இதனால், ஆத்திரமடைந்த இளைஞர்கள் "நீங்கள் ஓசி டிக்கெட் தானே.. ஓசி டிக்கெட் வாங்கிக் கொண்டு நீங்கள் அமர்ந்து வருவீர்கள்.. காசு கொடுத்து பயணம் செய்யும் நாங்கள் நின்று வர வேண்டுமா..?” என்று கேட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. இது குறித்து மீண்டும் அந்த பெண் கேட்டுள்ளார். ஏன் இப்படி பேசுகிறீர்கள்? என்று கேட்டதுடன் பெண்கள் இருக்கையில் இளைஞர்கள் அமர்ந்து இருப்பதையும் மகளிர் நின்று வருவதையும் வீடியோ எடுத்துள்ளார்.
இதை பார்த்த அந்த இளைஞர்கள் “நீங்கள் மட்டும் தான் வீடியோ எடுப்பீர்களா.. நாங்களும் எடுப்போம்” என்று கூறி வீடியோ எடுத்துள்ளனர். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இந்நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாக சென்னை மாநகர போக்குவரத்து கழகம் விளக்கமளித்துள்ளது. இது தொடர்பாக வெளியான சமூக வலைதள பதிவில், “தடம் எண் 26 ஐயப்பன் தாங்கலிலிருந்து பிராட்வே செல்லும் வழியில் கோடம்பாக்கம் அருகே பேருந்தில் பயணம் செய்த மாணவர்கள் மகளிர்க்கு ஒதுக்கப்பட்ட இருக்கையில் அமர்ந்து பயணம் செய்துள்ளனர்.
அதனைக் கேட்ட பெண் பயணியுடன் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இந்த புகார் குறித்து உரிய விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும் காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது” என்று குறிப்பிட்டுள்ளனர்.