தமிழ்நாடு

தேனியில் பட்டாகத்தியுடன் கூலிப்படை தாக்குதல்...உயிர் பயத்தில் பதறி ஓடிய கிராம மக்கள்

பெரியகுளம் பகுதியில் பட்டாகத்தி, அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்களுடன் தாக்குதலில் ஈடுபட்ட கூலிப்படையினரால் பரபரப்பும், அதிர்ச்சியும் ஏற்பட்டது.

  தேனியில் பட்டாகத்தியுடன் கூலிப்படை தாக்குதல்...உயிர் பயத்தில் பதறி ஓடிய கிராம மக்கள்
கடை முன்பு அமர்ந்திருந்த நபர் மீது கூலிப்படை கும்பல் தாக்குதல் | A gang of mercenaries attacked a person sitting in front of a shop
தேனி மாவட்டம், பெரியகுளம் அருகே உள்ள கைலாசபட்டியில் தேனி- பெரியகுளம் சாலையில் பஞ்சர் கடை நடத்தி வருபவர் பெருமாள் மகன் தம்பி (எ) பெருமாள் (45).
இரவு கடை முன்பாக இவரும் நண்பர்கள் சிலரும் அமர்ந்து பேசிக்கொண்டிருந்தனர்.

பட்டாகத்தியால் தாக்குதல்

அப்போது அங்கு வந்த சுமார் பத்து பேர் கொண்ட கூலிப்படையைச் சேர்ந்த கும்பல் பட்டாகத்தி, அரிவாள் உள்ளிட்ட பயங்கரமான ஆயுதங்களுடன் ஓடி வந்ததை பார்த்து கடையில், பெருமாளுடன் அமர்ந்து பேசிக்கொண்டிருந்த கிராம மக்கள் பதற்றம் அடைந்து அங்கிருந்து ஓடினர்.

அப்போது கடையில் இருந்த பெருமாளை ஆயுதங்களுடன் வந்த கூலிப்படை கும்பல் அரிவாளால் வெட்டினர். மேலும் இவரது உறவினர் முத்து மகன் செல்வம் என்பவருக்கும் முதுகில் வெட்டு விழுந்தது.இதனையடுத்து தாக்குதலில் ஈடுபட்ட கும்பல் ஒரு காரில் ஏறி அங்கிருந்து தப்பிச்சென்றதாக கூறப்படுகிறது.

போலீசார் விசாரணை

இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்ததும் கைலாசபட்டி கிராமத்தைச் சேர்ந்த பாதிக்கப்பட்டவர்களின் உறவினர்கள் குற்றவாளிகளை கைது செய்ய வலியுறுத்தி பெரியகுளம் - தேனி நெடுஞ்சாலையில் திடீர் சாலை மறியலில் ஈடுபட முயன்றனர். இதுகுறித்து தகவல் அறிந்த பெரியகுளம் காவல்துறை துணை கண்காணிப்பாளர் நல்லு தலைமையிலான காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மறியலில் ஈடுபட முயன்றவர்களை சமாதானப்படுத்தி சாலை மறியலில் ஈடுபட வேண்டாம் எனக் கூறி சாலை மறியலை கைவிட செய்தனர்.

அப்போது பாதிக்கப்பட்டவர்களின் உறவினர்கள் கைலாசபட்டி கிராமத்தைச் சேர்ந்த சிலர் மீது சந்தேகம் இருப்பதாகவும், இச்செயலில் ஈடுபட்டவர்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுத்து கைது செய்ய வேண்டும் என வலியுறுத்தினர்.இதில் படுகாயம் அடைந்த பெருமாள், செல்வம் ஆகிய இருவரும் தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். மேலும் பட்டாகத்தி மற்றும் அரிவாளுடன் பயங்கர ஆயுதங்களுடன் கிராம பகுதிக்குள் புகுந்து தாக்குதல் நடத்திய சம்பவத்தால் கிராம மக்கள் பெரும் அதிர்ச்சி மற்றும் அச்சத்தில் உள்ளனர்.