தமிழ்நாடு

மதுரை மாநாடு: கொதிக்கும் வெயில் – கலங்கும் தவெக தொண்டர்கள்

மதுரையில் இன்று 2-வது மாநில மாநாட்டில் ஏராளமானோர் குவிந்துள்ளனர்.

 மதுரை மாநாடு: கொதிக்கும் வெயில் – கலங்கும் தவெக தொண்டர்கள்
மதுரை தவெக மாநாட்டில் கடும் வெயில் காரணமாக தொண்டர்கள் கடும் அவதி
மதுரை மாவட்டம், பாரபத்தியில் நடைபெறும் தவெகவின் 2வது மாநில மாநாட்டிற்கு தமிழகம் மட்டுமின்றி கேரளா, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களில் இருந்தும் தவெக தொண்டர்கள், ரசிகர்கள் திரண்டுள்ளனர்.

தவெக 2வது மாநாடு

அனைத்து வாகனங்கள் வலையங்குளம் சந்திப்பில் இருந்தே மாநாடு நடைபெறும் இடத்திற்கு செல்ல முடியும்.இதனால் இப்பகுதி 2 நாட்களுக்கு முன்பு இருந்தே போலீஸ் பாதுகாப்பு அதிக அளவில் போடப்பட்டுள்ளது. இன்று காலை முதல் நூற்றுக்கும் மேற்பட்ட காவல்துறையினர் பகுதியில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

மாநாட்டை விஜய் மாலை 4 மணிக்குத் தொடங்கி இரவு 7 மணிவரை நடத்த திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.அந்த வகையில் 3 மணிக்கு விஜய் அவருக்காக அமைக்கப்பட்டுள்ள நடைமேடையில் ரேம்ப் வாக் வருவதாகவும், பிறகு புஸ்ஸி ஆனந்த் 4 மணியளவிலும், அதனைத் தொடர்ந்து ஆதவ் அர்ஜூனா உள்ளிட்ட நிர்வாகிகள் பேசுவதாகவும் தெரிகிறது.

சுங்கக்கட்டணம் இலவசம்

இதையடுத்து 5 மணியளவில் விஜய் தனது உரையைத் தொடங்குவார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே நடந்த மாநாட்டில் விஜய்யின் பேச்சுக்குப் பெரும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
இந்த நிலையில், இன்று மாலை நடைபெறும் த.வெ.க. மாநாட்டுக்கு இப்போதே 1 லட்சத்திற்கும் மேல் தவெக நிர்வாகிகள், தொண்டர்கள் மற்றும் ரசிகர்கள் திரண்டுள்ளனர். ஏற்கனவே நேற்று நள்ளிரவு வந்த வாகனங்கள் சுங்கச்சாவடிகளில் கட்டணத்தைக் கட்ட மறுத்துச் சேதப்படுத்திய நிலை ஏற்பட்டது. இதனால் இன்று காலை முதல் சுங்கக்கட்டணம் இல்லாமல் இலவசமாக வாகனங்கள் செல்ல அனுமதி அளிக்கப்பட்டது.

மேலும் பெண்களுக்கு எனத் தனியாக அமருவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. முன்னதாகக் குடிநீர் வசதி செய்யப்பட்டும் தண்ணீர் வராததால் ஆம்புலன்ஸ் வாகனத்தில் ஏற்றிவரப்பட்ட தண்ணீர் பாட்டில்களை தவெகவினர் தொண்டர்களுக்கு விநியோகம் செய்தனர்.

வெயிலால் தவிக்கும் தொண்டர்கள்

வெயில் கடுமையாக இருப்பதால் குழந்தைகளைத் தூக்கிக்கொண்டு வந்த தவெக நிர்வாகிகள் மட்டும் ரசிகர்கள் கடும் அவதி அடைந்தனர். நிழல் இல்லாததால் கீழே இருந்த நாற்காலிகள் மற்றும் துணிகளைத் தலைக்கு மேல் வைத்துக்கொண்டு அமர்ந்துள்ளனர்.

கடும் வெயில் காரணமாக 4க்கும் மேற்பட்டோர் மயக்கம் அடைந்தனர். அவர்களுக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. மேலும் நிர்வாகிகள் முன்னதாகவே அவர்களது நாற்காலிகளில் அமர்ந்துள்ளதால் மாநாடு முன்னதாகவே தொடங்க வாய்ப்புள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது.