தமிழ்நாடு

கிட்னி விற்பனை விவகாரம்.. புதிய ஆடியோ வெளியாகி பரபரப்பு

சிறுநீரக விற்பனை தொடர்பாக புதிய ஆடியோ ஒன்று வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கிட்னி விற்பனை விவகாரம்.. புதிய ஆடியோ வெளியாகி பரபரப்பு
கிட்னி விற்பனை விவகாரம்
நாமக்கல் மாவட்டம், பள்ளிபாளையம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கூலித் தொழில் செய்யும் விசைத்தறி தொழிலாளர்களைக் குறிவைத்து நடைபெற்று வரும் சிறுநீரக விற்பனை தொடர்பாக, பாதிக்கப்பட்ட ஒருவர் பேசிய புதிய ஆடியோ வெளியாகி பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. மருத்துவத் துறையினரும் காவல்துறையினரும் இந்த விவகாரம் குறித்துத் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

ஏற்கனவே, சிறுநீரக விற்பனையில் ஈடுபட்ட இடைத்தரகர் ஒருவர் பேசிய ஆடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், தற்போது தனது சிறுநீரகத்தை விற்ற ஒருவர் பேசிய ஆடியோ வெளியாகி உள்ளது. இந்த ஆடியோவில் தனக்கு சிறுநீரகம் விற்பனை செய்ததற்குக் 5 லட்சம் ரூபாய் கொடுக்கப்பட்டதாகவும், திருச்சியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டதாகவும் கூறியுள்ளார். அறுவை சிகிச்சைக்கு முன்னதாக அனைத்து உடல் பரிசோதனைகளும் மேற்கொள்ளப்பட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

விசைத்தறிக்கூடங்களில் முன் தொகை பெற்றதாலும், மைக்ரோ பைனான்ஸ் உள்ளிட்ட நிறுவனங்களில் கடன் பெற்றதாலும் மிகுந்த கடன் சுமைக்கு ஆளாகியதால் தனது சிறுநீரகத்தை விற்பனை செய்ததாகவும், அதன் மூலம் கிடைத்த பணத்தை தனது கடனை அடைக்கப் பயன்படுத்தியதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

சிறுநீரக விற்பனைக்குப் பிறகு தனது உடல்நிலை சரிவர ஒத்துழைக்கவில்லை எனவும், கடுமையான பணிகள் மேற்கொள்ள இயலவில்லை எனவும் அந்த ஆடியோவில் அவர் தெரிவித்துள்ளார்.

நாளுக்கு நாள் இந்தச் சிறுநீரக விற்பனை தொடர்பான பிரச்சினை பூதாகரமாகி வரும் நிலையில், இந்த விவகாரத்தில் தமிழக அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கோரிக்கை எழுந்துள்ளது.