தமிழ்நாடு

கரூர் பெருந்துயரம்: மற்றொரு தவெக நிர்வாகி கைது!

கரூர் சம்பவம் தொடர்பாக மாவட்ட செயலாளர் மதியழகனை தொடர்ந்து மற்றொரு தவெக நிர்வாகியை போலீசார் கைது செய்துள்ளனர்.

 கரூர் பெருந்துயரம்: மற்றொரு தவெக நிர்வாகி கைது!
TVK Cadre Arrested
தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் பிரசாரக் கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக, தவெக-வின் முக்கிய நிர்வாகிகளான மதியழகனைத் தொடர்ந்து மற்றொரு நிர்வாகியான பவுன்ராஜ் என்பவரையும் போலீசார் கைது செய்துள்ளனர்.

மாவட்ட செயலாளர் கைது

கடந்த 27 ஆம் தேதி அன்று கரூர், வேலுச்சாமிபுரத்தில் நடந்த பிரசாரக் கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். இந்தச் சம்பவம் தொடர்பாக கரூர் டவுன் போலீசார் வழக்குப் பதிவு செய்து ஐந்து தனிப்படைகள் அமைத்து விசாரணை மேற்கொண்டு வந்தனர்.

இந்தச் சூழலில், நேற்று (செப்.29) இரவு தவெக கரூர் மேற்கு மாவட்டச் செயலாளர் மதியழகன் கைது செய்யப்பட்டு, கரூர் நகர காவல் நிலையத்தில் வைத்து விசாரிக்கப்பட்டு வருகிறார்.

மற்றொரு நிர்வாகி கைது

மதியழகனைத் தொடர்ந்து, அந்தக் கூட்டத்திற்கான கொடி கம்பம் மற்றும் பிளக்ஸ் பேனர்களை ஏற்பாடு செய்த கரூர் நகரப் பொறுப்பாளர் பவுன்ராஜ் என்பவரும் தற்போது கைது செய்யப்பட்டுள்ளார். மாவட்டச் செயலாளர் மதியழகன் தங்குவதற்குக் அடைக்கலம் கொடுத்தவர் என்ற அடிப்படையிலும் பவுன்ராஜ் கைது செய்யப்பட்டிருக்கலாம் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

தற்போது கைதான இருவரும் கரூர் நகர காவல் நிலையத்தில் வைத்துத் தீவிர விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர். இவ்வழக்கில் உள்ள மேலும் சில முக்கிய நிர்வாகிகளை விரைவில் கைது செய்ய வாய்ப்புள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.