தமிழ்நாடு

கரூர் கூட்ட நெரிசல் விவகாரம்: சிபிஐ விசாரணைக்கு மறுப்பு தெரிவித்த உயர் நீதிமன்றம்!

கரூர் தவெக கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்த வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்றக் கோரிய மனுக்களைச் சென்னை உயர் நீதிமன்றம் இன்று தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.

கரூர் கூட்ட நெரிசல் விவகாரம்: சிபிஐ விசாரணைக்கு மறுப்பு தெரிவித்த உயர் நீதிமன்றம்!
கரூர் கூட்ட நெரிசல் விவகாரம்: சிபிஐ விசாரணைக்கு மறுப்பு தெரிவித்த உயர் நீதிமன்றம்!
நாடு முழுவதும் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்திய கரூர் கூட்ட நெரிசல் விவகாரத்தில், சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடக் கோரித் தாக்கல் செய்யப்பட்ட மனுவை அவசர வழக்காக விசாரிக்கச் சென்னை உயர் நீதிமன்றம் திட்டவட்டமாக மறுத்துள்ளது. விசாரணையின் ஆரம்ப நிலையிலேயே சிபிஐக்கு மாற்ற வேண்டும் என்ற பாஜக கவுன்சிலர் உமா ஆனந்தனின் கோரிக்கையை நிராகரித்து நீதிபதிகள் முக்கிய உத்தரவு பிறப்பித்துள்ளனர்.

கரூர் மாவட்டத்தில் கடந்த செப்டம்பர் 28, 2025 அன்று தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் கலந்து கொண்ட பரப்புரையின்போது ஏற்பட்ட நெரிசலில் பெண்கள், குழந்தைகள் உட்பட 41 பேர் பலியாகினர். பலர் படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்தச் சோகச் சம்பவம் மாநிலம் முழுவதும் சலசலப்பை ஏற்படுத்திய நிலையில், இந்த விவகாரத்தை சிபிஐக்கு மாற்ற வேண்டும் என்று பல்வேறு தரப்பினரும் கோரிக்கை வைத்து வந்தனர்.

அந்த வகையில், பாஜக கவுன்சிலர் உமா ஆனந்தன் இந்த வழக்கைச் சிபிஐ விசாரிக்க உத்தரவிடக் கோரிச் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். இன்று விசாரணைக்கு வந்த இந்த மனு குறித்து நீதிபதிகள் கடுமையான கேள்விகளை முன்வைத்தனர். சிபிஐ விசாரணை கோரிய மனுதாரர் பாதிக்கப்பட்டாரா என்று கேள்வி எழுப்பிய நீதிபதிகள், நீதிமன்றத்தை அரசியல் மேடையாக மாற்ற வேண்டாம் என்றும் கறாராக அறிவுறுத்தினர்.

போலீஸ் விசாரணையில் திருப்தி இல்லை என்றால் விசாரணையை மாற்றலாம். விசாரணையின் ஆரம்ப நிலையிலேயே சிபிஐ-க்கு மாற்ற வேண்டும் என எப்படி கேட்க முடியும்? என்று விசாரணையின் நியாயத்தை நீதிபதிகள் கேள்விக்குள்ளாக்கினர். சிபிஐ விசாரணை கோரிய மனுக்கள் விசாரணைக்கு உகந்தது அல்ல என்று கூறி, பாஜக கவுன்சிலர் உள்ளிட்டோர் தாக்கல் செய்த மனுக்களை நீதிபதிகள் தள்ளுபடி செய்தனர். இதன் மூலம், கரூர் கூட்ட நெரிசல் விவகாரத்தில் தற்போது தமிழக போலீசாரின் விசாரணையே தொடரும் என்பது உறுதியாகியுள்ளது.