தமிழ்நாடு

வாகன ஓட்டிகள் கவனத்திற்கு.. அபராதம் செலுத்தினால் மட்டுமே இன்ஸூரன்ஸ் புதுப்பிக்கலாம்!

வாகனங்களுக்கான அபராத நிலுவைத் தொகையை செலுத்தினால்தான், இன்சூரன்ஸ் புதுப்பிக்க முடியும் என்ற புதிய நடைமுறையை அமல்படுத்த சென்னை போக்குவரத்து காவல்துறை திட்டமிட்டுள்ளது.

வாகன ஓட்டிகள் கவனத்திற்கு.. அபராதம் செலுத்தினால் மட்டுமே இன்ஸூரன்ஸ் புதுப்பிக்கலாம்!
Insurance can only be renewed if you pay a traffic violation fine
போக்குவரத்து விதிமீறல் அபராதத் தொகையை நிலுவையில் வைத்திருக்கும் வாகன ஓட்டிகளுக்கு "செக்" வைக்கும் வகையில், நிலுவைத் தொகையைச் செலுத்தினால் மட்டுமே இன்சூரன்ஸை புதுப்பிக்க முடியும் என்ற புதிய நடைமுறையை அமல்படுத்தச் சென்னை போக்குவரத்து போலீசார் திட்டமிட்டுள்ளனர். இது தொடர்பான பரிந்துரைகளை விரைவில் போக்குவரத்து துறைக்கு அனுப்ப முடிவு செய்துள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது.

ஏன் இந்த புதிய திட்டம்?

சென்னையில் போக்குவரத்து விதிகளை முறையாகப் பின்பற்றாதவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே செல்கிறது. பல நடைமுறைகள் கொண்டு வரப்பட்டபோதும், விதிகளை மீறி அபராதம் விதிக்கப்பட்ட பலர், பல ஆண்டுகளாக அதனைச் செலுத்தாமல் உள்ளனர். இந்த நிலையில், நிலுவையில் உள்ள போக்குவரத்து விதிமீறல் அபராதத் தொகையை வசூலிப்பதற்காகப் புதிய நடைமுறையைக் கொண்டுவரச் சென்னை போக்குவரத்து போலீசார் திட்டமிட்டுள்ளனர்.

தற்போதுள்ள நடைமுறைகள்

வாகனங்களை விற்பனை செய்யும்போதும், உரிமையாளர் பெயரை மாற்றும்போதும், ஓட்டுநர் உரிமம் புதுப்பிக்கும்போதும், வாகனங்களுக்கு எஃப்.சி (Fitness Certificate) செய்யும்போதும் நிலுவையில் உள்ள அபராதத் தொகையைச் செலுத்தினால் மட்டுமே அவை அனுமதிக்கப்படும் என்ற நடைமுறையை ஆர்டிஓ (RTO) ஏற்கனவே பின்பற்றி வருகிறது.

இன்சூரன்ஸ் உடன் இணைப்பு

ஆனால், தற்போது இன்சூரன்ஸ் நிறுவனங்களில் வாகன ஓட்டிகள் தங்கள் காப்பீட்டைப் புதுப்பிக்கச் செல்லும்போது, நிலுவையில் உள்ள அபராதத் தொகையைச் செலுத்தி முடித்தால் மட்டுமே இன்சூரன்ஸை புதுப்பிக்க முடியும் என்ற நடைமுறையைக் கொண்டுவரப் போக்குவரத்து போலீசார் திட்டமிட்டுள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது. இதற்காக, போக்குவரத்துத் துறை மற்றும் தனியார் இன்சூரன்ஸ் நிறுவன அதிகாரிகளுடன் பல்வேறு ஆலோசனைகளை நடத்தி வருகின்றனர்.

இந்த நடைமுறை அமலுக்கு வந்தால், நிலுவையில் உள்ள அபராதத் தொகையை வசூலிப்பது எளிமையாகும். மேலும், இதுகுறித்த பரிந்துரைகளைத் தயாரித்து, விரைவில் போக்குவரத்து துறைக்கு அனுப்பப் போக்குவரத்து போலீசார் முடிவு செய்துள்ளனர்.