தமிழ்நாடு

நடுவானில் இயந்திரக் கோளாறு.. சென்னையில் இண்டிகோ விமானம் அவசர தரையிறக்கம்!

சென்னையில் இருந்து பெங்களூருக்குச் சென்ற இண்டிகோ விமானம் நடுவானில் திடீரென இயந்திரக் கோளாறு ஏற்பட்டதால், மீண்டும் சென்னையில் அவசரமாகத் தரையிறங்கியது.

நடுவானில் இயந்திரக் கோளாறு.. சென்னையில் இண்டிகோ விமானம் அவசர தரையிறக்கம்!
IndiGo flight makes emergency landing in Chennai
சென்னையில் இருந்து பெங்களூருக்குச் சென்ற இண்டிகோ ஏர்லைன்ஸ் விமானம் நடுவானில் திடீரென இயந்திரக் கோளாறு ஏற்பட்டதால், மீண்டும் சென்னை விமான நிலையத்திற்கே அவசரமாகத் தரையிறங்கியது. விமானியின் துரித நடவடிக்கையால் விமானத்தில் இருந்த 165 பேரும் உயிர் தப்பினர்.

இயந்திரத்தில் கோளாறு

சென்னை உள்நாட்டு விமான நிலையத்தில் இருந்து 160 பயணிகள் மற்றும் 5 விமான ஊழியர்கள் உட்பட 165 பேருடன் இண்டிகோ ஏர்லைன்ஸ் விமானம் பெங்களூருக்குப் புறப்பட்டுச் சென்றது.

விமானம் சென்னையில் இருந்து புறப்பட்டு, வேலூர் அருகே நடுவானில் பறந்துகொண்டிருந்தபோது, திடீரென விமானத்தின் இயந்திரத்தில் கோளாறு ஏற்பட்டது. இதைக் கண்ட விமானி உடனடியாக சென்னை விமான நிலையக் கட்டுப்பாட்டு அறையைத் தொடர்புகொண்டு தகவல் தெரிவித்தார்.

அவசரத் தரையிறக்கம்

இதையடுத்து, விமானத்தை மீண்டும் சென்னைக்குத் திருப்பி வந்து அவசரமாகத் தரையிறக்குமாறு கட்டுப்பாட்டு அறை அதிகாரிகள் உத்தரவிட்டனர். அதன்படி, விமானி துரிதமாகச் செயல்பட்டு, விமானத்தை மீண்டும் சென்னைக்குக் கொண்டுவந்து பாதுகாப்பாகத் தரையிறக்கினார்.

இதையடுத்து, விமானத்தில் இருந்த பயணிகள் அனைவரும் கீழே இறக்கப்பட்டு, சென்னை விமான நிலைய ஓய்வறைகளில் தங்க வைக்கப்பட்டனர். உடனடியாக விமானத்தைப் பழுது பார்க்கும் பணியில் பொறியாளர்கள் ஈடுபட்டனர். ஆனால், விமானத்தை உடனடியாகப் பழுது பார்க்க முடியாததால், மாற்று விமானம் மூலம் பயணிகளை பெங்களூருக்கு அனுப்பி வைக்க முடிவு செய்யப்பட்டது.

நடுவானில் பறந்து கொண்டிருந்தபோது ஏற்பட்ட கோளாறை விமானி சரியான நேரத்தில் கண்டறிந்து செயல்பட்டதால், பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டு, விமானத்தில் இருந்த 165 பேரும் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். இந்தச் சம்பவம் சென்னை விமான நிலையத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. பின்னர், மாற்று விமானம் மூலமாக 160 பயணிகளும் பெங்களூருக்குப் பத்திரமாக அனுப்பி வைக்கப்பட்டனர்.