தமிழ்நாடு

ஆட்சிக்கு வந்தால் 1000 மரம் நட்டால் அரசு மரியாதை - சுற்றுச்சூழல் மாநாட்டில் சீமான் பேச்சு!

நாம் தமிழர் கட்சியின் சுற்றுச்சூழல் பாசறை சார்பில், திருத்தணி அருகே நடைபெற்ற 'மரங்களின் மாநாடு' நிகழ்ச்சியில் பேசிய அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், "தான் ஆட்சிக்கு வந்தால், 1000 மரக்கன்றுகள் நடுபவர்களுக்கு அவர்களின் இறுதிச் சடங்கு அரசு மரியாதையுடன் நடைபெறும்" என்று அறிவித்துள்ளார்.

ஆட்சிக்கு வந்தால் 1000 மரம் நட்டால் அரசு மரியாதை -  சுற்றுச்சூழல் மாநாட்டில் சீமான் பேச்சு!
ஆட்சிக்கு வந்தால் 1000 மரம் நட்டால் அரசு மரியாதை - சுற்றுச்சூழல் மாநாட்டில் சீமான் பேச்சு!
சமீபத்தில் மதுரையில் கால்நடைகளுக்கான மாநாடு நடத்தியதைத் தொடர்ந்து, நாம் தமிழர் கட்சி சார்பில் 'மரங்களோடு பேசுவோம், மரங்களுக்காகப் பேசுவோம்' என்ற தலைப்பில் இந்த மாநாடு நடத்தப்பட்டது. நிகழ்ச்சியில் பேசிய சீமான், சுற்றுச்சூழலின் முக்கியத்துவத்தை வலியுறுத்திப் பல்வேறு கருத்துக்களைப் பகிர்ந்துகொண்டார்.

பருவநிலை மாற்றம்: மரங்கள் வெட்டப்படுவதால் பருவமழை குறைந்து புயல் மழை மட்டுமே பெய்யும் நிலை உருவாகியுள்ளது. புவி வெப்பமயமாதல் அதிகரித்தால் கடல் கொந்தளித்து, கடலோரப் பகுதிகள் பாதிக்கப்படும்.

மாசுபடும் காற்று:

"தண்ணீரை விற்பனை செய்வது போல, வருங்காலத்தில் காற்றையும் விற்பனை செய்வார்கள். டெல்லியைப் போலத் தமிழ்நாட்டிலும் சுத்தமான காற்றை பாட்டிலில் விற்கும் நிலை வரும்," என்று சீமான் எச்சரித்தார்.

மரங்கள் வளர்க்க ஊக்கத்தொகை

சட்டத் திட்டம்: ஆட்சிக்கு வந்தால், ஒரு மரத்தின் கிளையை வெட்டினால் கூட ஆறு மாதம் சிறைத் தண்டனை வழங்கப்படும் என்று சீமான் தெரிவித்தார்.

மரம் வளர்க்க ஊக்கத்தொகை:

மாணவர்கள் 100 மரக்கன்றுகள் நட்டால் பொதுத் தேர்வில் 10 மதிப்பெண்கள் வழங்கப்படும். 1000 மரக்கன்றுகள் நடுபவர்களுக்கு அரசு பணித் தேர்வுகளில் 10 மதிப்பெண்கள் வழங்கப்படும். மேலும், அவர்களின் இறுதிச் சடங்கு அரசு மரியாதையுடன் நடைபெறும் என்றும் அவர் கூறினார்.

மாநாட்டில், மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம், இயற்கை வேளாண் அறிஞர் நம்மாழ்வார், நடிகர் விவேக் உள்ளிட்டோரின் திருவுருவப்படங்களுக்கு மரியாதை செலுத்தி, அவர்களது பெயரில் மரக்கன்றுகள் நடப்பட்டன. மாநாட்டின் இறுதியில், 2026 சட்டமன்றத் தேர்தலுக்கான திருவள்ளூர் மற்றும் திருத்தணி தொகுதி வேட்பாளர்களையும் சீமான் அறிமுகப்படுத்தினார்.