தமிழ்நாடு

“மழை நீர் தானாகவே வெளியேறிவிடும்” - சென்னை மக்களுக்கு நற்செய்தி சொன்ன அமைச்சர்

சென்னையில் 15 சென்டிமீட்டர் அளவில் மழை பெய்யும் பட்சத்தில் மழை நீர் தானாகவே வெளியேறிவிடும் என்று நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்துள்ளார்.

“மழை நீர் தானாகவே வெளியேறிவிடும்” - சென்னை மக்களுக்கு நற்செய்தி சொன்ன அமைச்சர்
மழை நீர் தானாகவே வெளியேறிவிடும் - அமைச்சர் கே.என்.நேரு

தென்கிழக்கு வங்கக் கடலில் உருவாகிய குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று காலை 8:30 மணி அளவில் அதே பகுதியில் மையம் கொண்டுள்ளது. இது தொடர்ந்து மேற்கு வடமேற்கு நோக்கி நகர்ந்து நாளை ஆழ்ந்த காற்று அழுத்த தாழ்வு பகுதியாக வலுவடைய உள்ளது.

அதனைத் தொடர்ந்து மேற்கு வட மேற்கு நோக்கி நகர்ந்து புதுச்சேரி வடதமிழ்நாடு மற்றும் அதனை ஒட்டிய தெற்கு ஆந்திரா கரை ஓரம் நிலவக்கூடும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதற்கிடையில் தனியார் வானிலை ஆய்வாளர் பிரதீப் ஜான் கூறுகையில், ”வரக்கூடிய அக்டோபர் டிசம்பர் மாதங்களுடன் ஒப்பிடுகையில் நவம்பர் மாதத்திலேயே அதீத கனமழை பெய்வதற்கான வாய்ப்பு உள்ளது. நவம்பர் மாதத்தில் பெய்யும் மழையின் அளவை பொருத்தே சென்னையில் வெள்ள பாதிப்புகளுக்கான வாய்ப்பு உள்ளதா என்பதை கணிக்க முடியும்” என்று தெரிவித்து இருந்தார்.

இந்நிலையில், சென்னை மாநகராட்சி ரிப்பன் மாளிகை வளாகத்தில் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு ஆலோசனை நடத்தினர். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் கே.என்.நேரு, “சென்னையில் 15 சென்டிமீட்டர் அளவில் மழை பெய்யும் பட்சத்தில் மழை நீர் தானாகவே வெளியேறிவிடும்.

40 சென்டிமீட்டர் மழை பெய்யும் பட்சத்தில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தயார் நிலையில் அரசு துரிதப்படுத்தி உள்ளது. தேங்கிய மழை நீரை வெளியேற்றும் வகையில், 990 இடங்களில் பம்பு செட்டுகள் அமைக்கப்பட்டுள்ளது. மழைநீர் தேங்கும் இடங்களில் பொதுமக்களுக்காக மருத்துவ உபகரணங்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது.

சென்னையில் உள்ள 21 சுரங்கப் பாதைகளும் மழைநீர் தேங்காத வகையில் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது. நேற்று ஒரு நாள் மட்டும் கட்டுப்பாட்டு அறைக்கு 1400 புகார்கள் பெறப்பட்டுள்ளது. முதல் கட்ட பணியாக 765 கிலோமீட்டர் நீளத்திற்கு மழை நீர் வடிகால் அமைக்கும் பணிகள் முழுமையாக நிறைவடைந்து உள்ளது. முதல் கட்டமாக நடைபெற்ற மழை நீர் வடிகால் பணிகள் முழுவதும் நிறைவடைந்துள்ளது.

சராசரியாக 20 சென்டிமீட்டர் வரை மழை பொழியும் பட்சத்தில் அரை மணி நேரத்திற்குள் மழை நீர் வடிந்து விடும். ஆனால் இரண்டு மணி நேரத்திற்குள்ளாக 40 செண்டிமீட்டர் மழை பதிவாகும் பட்சத்தில் மழை நீரை வெளியேற்றுவதற்காக முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிர படுத்தப்பட்டுள்ளது.

1156 நீலத்திற்கு இரண்டாம் கட்ட மழைநீர் வடிகால் அமைக்கும் பணிகள் முடியும் தருவாயில் உள்ளது. இரண்டாம் கட்டமாக நடைபெற்று வரும் மழைநீர் வடி கால் பணிகள் மற்றும் கழிவுநீர் அகற்றும் பணிகள் முடிவுறும் தேதியை உறுதியாக கூற இயலாது. ஆனால் விரைவில் அப்பணிகள் முடிவுறும்” என்றார்.