தமிழ்நாடு

கோவை அருகே கண்டெடுக்கப்பட்ட மனித கை.. போலீசார் விசாரணையில் விலகிய மர்மம்!

கோவை அருகே தனியார் நிறுவனத்தில் மனித கை கண்டெடுக்கப்பட்ட நிலையில், போலீசார் விசாரணையில் மர்மம் விலகியுள்ளது.

கோவை அருகே கண்டெடுக்கப்பட்ட மனித கை.. போலீசார் விசாரணையில் விலகிய மர்மம்!
Human hand found near Coimbatore
கோவை மாவட்டம், கள்ளபாளையம் பகுதியில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தின் அருகே துண்டிக்கப்பட்ட மனித வலது கை ஒன்று கண்டெடுக்கப்பட்டது. இது தொடர்பாக காவல்துறையினர் நடத்திய விசாரணையில், அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளன.

மனித கை கண்டெடுப்பு

கள்ளபாளையத்தில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தின் ஸ்டோர் அறைக்கு அருகே மனிதக் கை கிடப்பதாக, நிறுவனத்தின் மேலாளர் வைரவநாதன், உரிமையாளர் சுதாகரிடம் தெரிவித்தார். இதனால் அதிர்ச்சியடைந்த சுதாகர், உடனடியாக சூலூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதையடுத்து, சம்பவ இடத்திற்கு விரைந்த சூலூர் காவல்துறையினர், கண்டெடுக்கப்பட்ட கையின் உரிமையாளர் யார், அது அங்கு எப்படி வந்தது என்பது குறித்துத் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.

போலீசார் விசாரணையில் விலகிய மர்மம்

போலீஸ் விசாரணையில், அந்த கை திருப்பூரைச் சேர்ந்த அழகுபாண்டி என்பவருடையது என்பது தெரியவந்தது. அழகுபாண்டி, தனது மனைவியுடன் ஏற்பட்ட குடும்பத் தகராறு காரணமாக தண்டவாளத்தில் படுத்து தற்கொலைக்கு முயன்றிருக்கிறார். இதில் அவரது வலது கை துண்டாகி, கால்களும் பலத்த காயமடைந்து, தற்போது திருப்பூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

அழகுபாண்டியின் துண்டிக்கப்பட்ட கை மற்றும் சிதைந்த கால்கள் அகற்றப்பட்டு, கள்ளபாளையத்தில் உள்ள உயிரியல் மருத்துவக் கழிவு மையத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டுள்ளது. அங்கிருந்து ஒரு நாய், துண்டிக்கப்பட்ட கையை எடுத்து, அருகிலிருந்த சுதாகரின் நிறுவன வளாகத்தில் வீசியதாக போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது.

இந்தச் சம்பவம் கள்ளபாளையம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் காவல்துறையினர் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.