தமிழ்நாடு

6 மணிநேர போராட்டம்.. சரக்கு ரயிலில் ஏற்பட்ட தீ அணைக்கப்பட்டது!

திருவள்ளூர் அருகே சரக்கு ரயில் தடம்புரண்டு தீ விபத்துக்குள்ளான நிலையில், 6 மணிநேர போராட்டத்துக்கு பிறகு தீ முழுவதுமாக அணைக்கப்பட்டது.

6 மணிநேர போராட்டம்.. சரக்கு ரயிலில் ஏற்பட்ட தீ அணைக்கப்பட்டது!
Freight Train Fire Extinguished After 6-Hour Struggle
திருவள்ளூர் ரயில் நிலையம் அருகே சரக்கு ரயிலில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. ஐஓசி மணலியில் இருந்து ஜோலார்பேட்டைக்கு டீசல் ஏற்றிச் சென்ற சரக்கு ரயிலில் திடீரென தடம்புரண்டு விபத்துக்குள்ளாகி தீப்பிடித்து எரியத் தொடங்கியது. இதனால் அப்பகுதியில் கரும்புகை சூழ்ந்து காணப்பட்டது.

இதனைத்தொடர்ந்து, சம்பவ இடத்துக்கு விரைந்த தீயணைப்பு துறையினர் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். சுமார் பத்துக்கும் மேற்பட்ட வாகனங்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபடுத்தப்பட்டது.

மேலும் விபத்து ஏற்பட்ட பகுதியில் உள்ள மக்கள் அப்புறப்படுத்தப்பட்டு பாதுகாப்பான இடத்திற்குக் கொண்டு செல்லப்பட்டனர். இதன் காரணமாக அந்த வழித்தடத்தில் இயக்கப்படுகின்ற ரயில்கள் அனைத்தும் ஆங்காங்கே நிறுத்தப்பட்டதால் ரயில் சேவைகளிலும் பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

இந்த விபத்து காரணமாக சென்னை சென்ட்ரல் - அரக்கோணம் இடையே ரயில் சேவை முடங்கியுள்ளது. ரயில் சேவை பாதிப்பால் திருவள்ளூரிலிருந்து சென்னை - அரக்கோணம் மார்க்கத்தில் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன.

சென்ட்ரலில் இருந்து காலை 5:50 மணிக்கு புறப்பட வேண்டிய மைசூர் வந்தே பாரத் ரயில் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திலேயே நிறுத்தப்பட்டுள்ளது. அதேபோல் காலை 6 மணிக்கு புறப்பட வேண்டிய மைசூர் சதாப்தி எக்ஸ்பிரஸ் ரயிலும் நிறுத்தப்பட்டுள்ளது. இந்த தீ விபத்து சம்பவம் தொடர்பாக அவசர உதவிக்காக சென்னை சென்ட்ரலில் அவசர சேவை மையம் அமைக்கப்பட்டுள்ளது.

மேலும், இந்த ரயிலில் 70,000 லிட்டர் வீதம் மொத்தமாக 18 டேங்கர்களில் 12.60 லட்சம் லிட்டர் டீசல் நிரப்பப்பட்டிருந்தது. அவை மொத்தமாக ரூ. 12 கோடி மதிப்பு இருக்கும் என்று கூறப்படும் நிலையில், மொத்தமாக தீயோடு தீயாய் போனது.இருப்பினும், இந்த தீவிபத்தில் உயிர்ச் சேதம் ஏதும் ஏற்படவில்லை என மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

தீயை அணைக்கும் முயற்சியில் தீயணைப்புத் துறை உள்பட தேசிய பேரிடர் மீட்புக் குழுவும் இணைந்து தொடர் முயற்சியில் ஈடுபட்டனர். இந்த நிலையில், சுமார் 6 மணிநேரப் போராட்டத்துக்கு பிறகு, தீ முழுவதுமாக அணைக்கப்பட்டது. 70 சதவிகித தீ அணைக்கப்பட்டபோதே, பகல் 1 மணியளவில் தீ முழுதும் அணைக்கப்பட்டும் என்று கணிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.