தமிழ்நாடு

தமிழ்நாடு டிஜிபி பெயரில் போலி சமூக வலைதள கணக்கு.. ரூ.30,000 பண மோசடி

தமிழ்நாடு டிஜிபி பெயரில் போலி சமூக வலைதள கணக்கு தொடங்கி மர்ம நபர்கள் மோசடி செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தமிழ்நாடு டிஜிபி பெயரில் போலி சமூக வலைதள கணக்கு.. ரூ.30,000 பண மோசடி
தமிழகத்தில் சைபர் கிரைம் மோசடிகளில் ஐபிஎஸ் மற்றும் ஐஏஎஸ் அதிகாரிகள் பெயரில் போலி சமூக வலைதளக் கணக்கு உருவாக்கி மோசடி செய்வது நிகழ்ந்து வந்தது. குறிப்பாக தனக்கு கீழ் வேலை பார்க்கும் அதிகாரிகளிடமும் கிப்ட் அல்லது பணம் கேட்பது போன்ற மோசடிகள் நடைபெற்றது. இச்சம்பவம் தொடர்பாக விழிப்புணர்வு ஏற்படுத்திய காவல்துறையினர் பலரை அதிரடியாக கைது செய்தனர்.

இந்த நிலையில் மீண்டும் ஐபிஎஸ் அதிகாரிகள் பெயிரில் போலி சமூக வலைதளக் கணக்கு உருவாக்கி அவர்கள் நண்பர்கள் பட்டியலில் உள்ளவர்களை குறி வைத்து பணமோசடி செய்ய ஆரம்பித்துள்ளனர். அந்த வகையில் சென்னையின் முன்னாள் காவல்துறை ஆணையரும், தமிழ்நாடு பயிற்சி கல்லூரியின் இயக்குநருமான டிஜிபி சந்திப் ராய் ரத்தோர் பெயரில் போலி சமூக வலைதள பக்கத்தை உருவாக்கி மோசடி நடந்துள்ளதாக தெரியவந்துள்ளது.

இதுகுறித்து பாதிக்கப்பட்ட தேனாம்பேட்டையைச் சேர்ந்த சுனில் என்பவர் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார். அவரது சமூக வலைதள பக்கத்தை மெசஞ்சர் மூலம் தொடர்பு கொண்டு உள்ளதாக புகாரில் தெரிவித்துள்ளார். மெசஞ்சரில் தன்னுடைய தனிப்பட்ட செல்போன் நம்பரை கேட்டதாகவும் அதன்பிறகு உதவி கமெண்ட் சந்தோஷ் குமார் என்பவர் வாட்ஸப் (Whatsapp) நம்பர் ஒன்றிலிருந்து பேசியதாக கூறியுள்ளார்.

தன்னிடம் வீட்டு உபயோகப் பொருட்கள் இருப்பதாகவும், பணியிட மாற்றம் காரணமாக அதை குறைந்த விலைக்கு விற்பனை செய்வதாக தெரிவித்துள்ளார். மேலும் 95 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள வீட்டு உபயோக பொருட்கள் விற்பனை ஆகியுள்ளதாக புகைப்படத்துடன் அனுப்பியதாக குறிப்பிட்டுள்ளார். டிஜிபி சந்திப் ராய் ரத்தோர் மூலமாக சமூக வலைதளத்தில் தொடர்பு கொண்டதால் நம்பிக்கையின் அடிப்படையில் மூன்று வீட்டு உபயோகப் பொருட்களை வாங்குவதாக தெரிவித்து முப்பதாயிரம் ரூபாய் பணத்தை ஜி பேயில் (Gpay) அனுப்பியதாக சுனில் தெரிவித்துள்ளார்.

அதன்பின்பு பொருட்கள் ஏதும் வராததால் சோதனை செய்து பார்த்தபோது சைபர் கிரைம் மோசடி கும்பல் கைவரிசை காட்டியதை அறிந்து அதிர்ச்சி அடைந்துள்ளார். சென்னை காவல்துறை ஆணையரகத்தில் புகார் அளித்ததன் அடிப்படையில் மத்திய குற்றப்பிரிவு சைபர் கிரைம் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

ஏற்கனவே கடந்த ஆண்டு முதலமைச்சர் பாதுகாப்பு பிரிவில் இருக்கும் திருநாவுக்கரசு ஐபிஎஸ் அதிகாரி பெயரில் போலி சமூக வலைதளக் கணக்கு உருவாக்கி மோசடி செய்த விவகாரத்தில் ராஜஸ்தானை சேர்ந்த இரண்டு பேரை சென்னை போலீசார் கைது செய்தனர். இந்நிலையில் தமிழ்நாட்டில் டிஜிபி ஒருவர் பெயரிலேயே போலி சமூக வலைதளக் கணக்கு உருவாக்கி மோசடி செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.