Father Died infront of Son in Thiruvannamalai : திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அடுத்த மேல்செங்கம் பகுதியைச் சேர்ந்தவர் லாரி ஓட்டுநர் ஜெகதீஷ் இவருக்கு திருமணமாகி, ஒரு மகன் (வயது 6) இருக்கிறார். லாரி ஓட்டுனராக பணிபுரிந்து வரும் ஜெகதீஷ், தன் மனைவி அவரது பெற்றோர் வீட்டிற்கு சென்றிருந்த நிலையில் தன் பிள்ளையுடன் பொழுதை கழித்து வந்துள்ளார்.
இந்நிலையில், கடந்த இரு தினங்களுக்கு முன்பு தன் பிள்ளை எதிரிலேயே, ‘நான் சாகப் போறேன்டா’ என அழுவதுபோல், விளையாட்டாக கூறியுள்ளார். மேலும், அவ்வாறு செய்தால் தனது மகன் என்ன செய்கிறான் என்று பார்க்கலாம் என நினைத்த ஜெகதீஷ், இதனை வீடியோ எடுக்கலாம் என செல்போனை ஆன் செய்து வைத்துள்ளார்.
பின்னர், கட்டிலில் படுத்துக் கொண்டிருக்கும் தன் மகனுடன் பேச்சுவார்த்தை கொடுத்துக் கொண்டே, படுக்கை அறையில் இருந்த மின் விசிறியில் புடவையில் தன் கழுத்திற்கு சுருக்கு வைத்துக்கொள்வது போல் நடித்துள்ளார். ஆனால், சில நொடியிலேயே ஜெகதீஷின் சுருக்கு போட்டது கழுத்தை இருக்கியுள்ளது.
சுருக்கு முடியை அவிழ்க்க முடியாமல் ஜெகதீஷ் தனது மகன் கண் முன்னே பரிதாபமாக உயிரிழந்து தொங்கினார். குழந்தை தனது தந்தை விளையாட்டாக தான் நடிக்கிறார் என அப்பாவியாக பார்த்துக் கொண்டிருந்தது. பின்னர், அசைவற்று தொங்கிக் கொண்டிருந்த தனது தன் தந்தைக்கு மூச்சு இருக்கிறதா என கை வைத்து சோதித்து பார்த்தது.
மூச்சு சரிவர வராததை உணர்ந்த மகன், செய்வதறியாது திகைத்து நின்றது. பிறகு, சுதாரித்திக்கொண்டு, தனது தந்தையின் கழுத்தில் இருந்த முடிச்சை அவிழ்த்து காப்பாற்ற முயற்சிக்கிறது. இந்த வீடியோ தற்போது சமூக வலை தளத்தில் பரவி, கல் மனதையும் கரைய வைக்கும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விளையாட்டாக வீடியோ எடுத்து உயிரை மாய்த்துக் கொண்ட சம்பவம், அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.