தமிழ்நாடு

விஜய் வருகை.. கட்டளைக்கு அடங்காத மதுரையன்ஸ்: பொதுச்சொத்து சேதம்

ஜனநாயகன் படப்பிடிப்பில் பங்கேற்பதற்காக மதுரை விமான நிலையத்திற்கு வருகை தந்தார் தவெக தலைவர் விஜய். அவரது ரசிகர்கள் மற்றும் தொண்டர்கள் ஒரே நேரத்தில் குவிந்ததால் மதுரை விமான நிலையம் ஸ்தம்பித்தது.

விஜய் வருகை.. கட்டளைக்கு அடங்காத மதுரையன்ஸ்: பொதுச்சொத்து சேதம்
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் அருகே தாண்டிக்குடி பகுதியில் ஜனநாயகன் படத்தின் படப்பிடிப்பில் பங்கேற்பதற்காக தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவரும் நடிகருமான விஜய் இன்று மதியம் சென்னையில் இருந்து தனி விமான மூலம் மதுரை வந்தடைந்தார். அவரைக் காண்பதற்காக அவரது ரசிகர்கள் மற்றும் தொண்டர்கள் இன்று காலை முதலே மதுரை விமான நிலையத்தில் குவிந்த வண்ணம் இருந்தனர்.

ஆயிரக்கணக்கான தொண்டர்கள் விமான நிலையத்தில் குவிந்ததால் சற்று பரபரப்பு ஏற்பட்டது. காவல்துறையினர் விமான நிலைய நுழைவு வாயிலேயே விஜய் ரசிகர்களை தடுத்து நிறுத்தி பயணிகளை மட்டும் உள்ளே அனுப்பினர். அப்போது காவல்துறையினரிடம் அவர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அதன் பின்னர் இருபுறமும் அணிவகுத்து நின்று அவர்களின் தலைவர் விஜயை பார்ப்பதற்கு உற்சாகத்துடன் காத்திருந்தனர்.

14 ஆண்டுகளுக்குப் பிறகு மதுரை வந்த நடிகர் விஜய் ஆயிரக்கணக்கான தொண்டர்கள் விமான நிலைய வளாகத்தில் உற்சாகத்துடன் வரவேற்றனர். அதைத்தொடர்ந்து பிரச்சார வாகனத்தில் ஏறிய நடிகர் விஜய் விமான நிலைய வெளிப்புற சாலை வரை வாகனத்தில் நின்றவாறு தொண்டர்களுக்கு கையை அசைத்து வந்தார். இருபுறமும் மலர் தூவி விஜய்யை வரவேற்றனர். அதைத்தொடர்ந்து கார் மூலம் புறப்பட்டு கொடைக்கானல் தாண்டிக்குடி சென்றார் தமிழக வெற்றி கழக தலைவர் விஜய்.

விஜய் கொடுத்த பேட்டி:

மதுரை வருவதற்கு முன்பாகவே சென்னை விமான நிலையத்தில் முதல் முறையாக செய்தியாளர்களை சந்தித்த விஜய் படப்பிடிப்புக்கு செல்வதால் தொண்டர்கள் யாரும் வாகனத்தில் பின் தொடர்வோ வாகனத்தின் மீது ஏறவோ இரு சக்கர வாகனத்தில் ஹெல்மெட் இல்லாமல் பயணிக்கவோ வேண்டாம் என அறிவுறுத்தி இருந்தார். இருந்தாலும் அவரை காணும் ஆவலில் அவரது ரசிகர்கள் அவர் வாகனத்தின் மீது ஏற முயற்சித்ததால் விஜய் வந்த வாகனத்தின் முன்பக்கம் சேதமடைந்தது.

மதுரை விமான நிலையத்தில் இருந்து மண்டேலா நகர் பகுதி வரை ரசிகர்கள் வாகனத்தை பின் தொடர்ந்தவாறு சென்றதால் விமான நிலைய வளாகம் முழுவதும் காலனி சிதறி கிடந்தது. விஜயை பார்க்கும் உற்சாகத்தில் அவரது ரசிகர்கள் விமான நிலையத்தின் ஓரத்தில் உள்ள தடுப்பு கம்பிகளை சேதப்படுத்திச் சென்றுள்ளனர்.

மேலும் கூட்ட நெரிசல் அதிகமாக இருந்ததால் அவரது வாகனம் சற்று நிறுத்தி பொறுமையாக வந்தது. அரசியல் பயணம் இன்றி படப்பிடிப்புக்காக மதுரை வந்த தமிழக வெற்றிக்கழகத் தலைவரின் விஜயை பார்க்க ஆயிரக்கணக்கான தொண்டர்கள் காலை முதல் விமான நிலையத்தில் சூழ்ந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. இன்னொருப்புறம் விஜய் அன்புக் கட்டளையிட்டும் அதை காதில் வாங்கிக்கொள்ளாத விஜய் ரசிகர்கள் மற்றும் தொண்டர்களால் பொதுமக்கள் பாதிக்கப்படுவதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.