தமிழ்நாடு

கால் மூட்டு வலியை போக்க ‘ஸ்ட்ரா’ வைத்தியம்- லட்சக்கணக்கில் மோசடி செய்த போலி சித்த மருத்துவர்கள் கைது

8ஆம் வகுப்பு படித்துவிட்டு வடமாநிலத்தவர்களை ஏமாற்றிய ராஜஸ்தானை சேர்ந்த போலி சித்த மருத்துவர்கள் கைது

கால் மூட்டு வலியை போக்க ‘ஸ்ட்ரா’ வைத்தியம்- லட்சக்கணக்கில் மோசடி செய்த போலி சித்த மருத்துவர்கள் கைது
ஸ்ட்ரா வைத்தியம் என கூறி மோசடி செய்த போலி மருத்துவர்கள் கைது
சென்னை கீழ்பாக்கம் மேடவாக்கம் டேங்க் ரோட்டில் வசித்து வருபவர் நிஷாந்த் கேஷா என்பவர் பைக் சர்வீஸ் கடை நடத்தி வருகிறார். இவர் கடந்த மாதம் குடும்பத்தினருடன் ஜெயின் கோயிலிக்கு சென்றிருந்தார். அவரது அண்ணி ரேஷ்மா என்பவர் படிக்கட்டு ஏறுவதில் சிரமப்பட்டதை பார்த்த, அங்கிருந்து அறிமுகமில்லாத 2 பேர், எங்களது தாயாரும் இதே போன்று படிக்கட்டு ஏறுவதில் சிரமப்பட்டார் என்றும், மருத்துவர் ஒருவர் வீட்டிற்கே வந்து சிகிச்சை செய்ததால் பூரண குணமடைந்தார் எனவும் கூறி மருத்துவரின் செல்போன் எண்ணைக் கொடுத்தனர்.

சித்த மருத்துவர் என கூறி மோசடி

இதனை நம்பிய நிஷாந்த் கேஷா அந்த மருத்துவரின் எண்ணிற்கு தொடர்பு கொண்டபோது, அவர் நிறைய அப்பாயிண்மெண்ட் இருப்பதாவும் 3 நாட்கள் கழித்து வருவதாகக் கூறி கடந்த 03.08.2025 அன்று வந்த 2 பேர் நிஷாந்த் கேஷாவின் அண்ணி ரேஷ்மா கால் மூட்டைச் சோதனை செய்து, பித் இருப்பதாகவும், அதைச் சிங்கி என்ற முறையில் எடுக்க வேண்டும் என்று கூறி Surgical Blade-ஆல் கால் மூட்டில் கீறி, கூம்பு வடி குழாய்மூலம் 30 முறை உறிஞ்சு இழுத்து பச்சை நிறம் போன்ற திரவத்தை எடுத்துள்ளனர்.

இறுதியாகக் கால் மூட்டில் ரத்தம் வந்ததை காண்பித்து, அவ்வளவுதான் கால் மூட்டு வலி இனி சரியாகிவிடும் என்று கூறி சிகிச்சைக்காகப் பணம் ரூ.1.5 லட்சத்தை வாங்கிச் சென்றனர். இந்நிலையில் ஒரு வாரமாகியும் நிஷாந்த் கேஷாவின் அண்ணிக்கு மூட்டு வலி சரியாகததால் சந்தேகமடைந்து அந்த 2 பேரைத் தொடர்பு கொள்ள முயன்றபோது செல்போன் சுவிட்ச் ஆப் ஆகி இருந்தது. விசாரித்தபோது அவர் போலி சித்த மருத்துவர்கள் எனத் தெரிந்தது.

வடமாநிலத்தவர்களை குறிவைத்து மோசடி

இதுகுறித்து நிஷாந்த் கேஷா தலைமைச்செயலக காலனி காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார்.போலீசார் வழக்குப்பதிவு செய்து தேடி வந்தனர். இந்த நிலையில் தலைமறைவான 2 பேரும் அயனாவரத்தைச் சேர்ந்தவர் ஆசிஷ் என்பவரின் தந்தை மோதிலால் சோனிக்கு, மூட்டு வலி சிகிச்சை அளிப்பதாகக் கூறி ஏமாற்றினர். காலைப் பரிசோதித்து, காலில் தேவையற்ற கொழுப்பு இருப்பதாகக் கூறி அதை எடுக்க வேண்டும். ஒரு முறை எடுக்க 5,000 ரூபாயாகும் என 2 பேரும் தெரிவித்துள்ளனர்.

இதனை நம்பி ஆசிஷும் சரி எனக்கூற, அவரது தந்தையின் காலில் லேசாகக் கீறி, ஸ்ட்ரா வைத்து உறிஞ்சுவது போல் செய்து, கொழுப்பை வெளியே துப்பியதாகத் தெரிகிறது. 32 தடவை கொழுப்பை உறிஞ்சி எடுத்துள்ளோம் எனக்கூறி, 1.60 லட்ச ரூபாய் கேட்டுள்ளனர். பேரம் பேசி, 75,000 ரூபாய் மட்டும் ஆசிஷ் கொடுத்ததாகத் தெரிகிறது. இதுகுறித்து தனது நண்பர் பிரவீன் என்பவரிடம் தெரிவித்தார்.

போலி சித்த மருத்துவர்கள் கைது

விசாரித்தபோது தான் அவர்கள் போலியெனத் தெரிந்தது. மேலும் காவல் நிலையத்தில் புகார் இருப்பதும் தெரிந்தது. அதனால் அவர்களைக் கையும் களவுமாகப் பிடிக்கப் பிரவீன் திட்டமிட்டு 2 பேரையும் கீழ்ப்பாக்கம் அடுக்குமாடி குடியிப்புக்கு வரவழைத்தார். பிறகு, அவர்களைப் பிடித்துத் தலைமை செயலக காலனி போலீசாரிடம் ஒப்படைத்தார்.

போலீசார் 2 பேரையும் கைது செய்து விசாரணை நடத்தினர்.விசாரணையில், போலி சித்த மருத்துவர்களான ராஜஸ்தானை சேர்ந்த முகமது இம்ப்ரோன் சிங் வாலா (36), முகமது இஸ்லாம் (42) ஆகிய இருவரை பெரியமேடு பகுதியில் வைத்துக் கைது செய்தனர். அவர்களிடமிருந்து பணம் ரூ.1,12,963, 3 வங்கி காசோலைகள், 4 செல்போன்கள் மற்றும் 2 கைக்கடிகாரங்கள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டது.

போலீசார் திட்டம்

2 பேரிடமும் நடத்திய விசாரணையில் இருவரும் 8ம் வகுப்புவரை படித்துள்ளதும், சித்த மருத்துவர்கள் எனக் கூறி இது போன்று மூட்டு வலிக்குச் சிகிச்சையளிக்கும்போது, ஏற்கனவே வாயில் பதுக்கி வைத்திருந்த முக அழகு சாதன முல்தானி மெட்டி கட்டியை வெளியே எடுத்துக் காண்பித்து மோசடி செய்துள்ளதும், இது போன்று வேறு சிலரை ஏமாற்றியுள்ளதும் தெரியவந்தது.

கைதான 2 பேரும் அண்ணாநகர், அயனாவரம், கெல்லீஸ், கீழ்ப்பாக்கம், புரசைவாக்கம் மற்றும் வேப்பேரி ஆகிய பகுதிகளில் வடமாநிலத்தவர் வசித்து வருபவர்களிடம் மோசடிமூலம் பணத்தை அபகரித்தது போலீஸ் விசாரணையில் தெரியவந்தது. விசாரணைக்குப் பிறகு போலீசார் இருவரையும் எழும்பூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி நீதிமன்ற காவலில் சிறையில் அடைத்துள்ளனர். சிறையில் அடைக்கப்பட்டுள்ள 2 பேரையும் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்கத் தலைமைச் செயலக காலனி போலீசார் திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.