தமிழ்நாடு

துணை நடிகையுடன் சல்லாபம்.. கம்பி நீட்டிய கனடா என்ஜினீயருக்கு போலீசார் வலை

திருமணம் செய்து கொள்வதாக கூறி உறவு வைத்து கொண்டு ஏமாற்றி விட்டதாக துணை நடிகை அளித்த புகாரை தொடர்ந்து கனடா நாட்டு சாப்ட்வேர் என்ஜினீயர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

துணை நடிகையுடன் சல்லாபம்.. கம்பி நீட்டிய கனடா என்ஜினீயருக்கு போலீசார் வலை
Actress Alleges Marriage Fraud by Canadian Engineer
சென்னை சாலிகிராமம் பகுதியைச் சேர்ந்த மாடலிங்கில் ஈடுபட்டு வரும் துணை நடிகை ஒருவர் இன்ட்டிரியர் கம்பெனி ஒன்றை நடத்தி வருகிறார். இவரது கல்லூரி நண்பர் அலெக்ஸ். இவருக்கு வேறொரு பெண்ணுடன் திருமணம் ஆகி கனடா நாட்டிற்கு சென்று விட்டார். அங்கு தனியார் மென்பொருள் நிறுவனத்தில் சாப்ட்வேர் என்ஜினீயராக பணியாற்றி வருகிறார்.

இந்த நிலையில் கடந்த 2024 ஆம் ஆண்டு அலெக்ஸ் திடீரென அந்த நடிகையை தொடர்பு கொண்டு, தனக்கும் தனது மனைவிக்கும் கருத்து வேறுபாடு உள்ளது என்றும் தனது மனைவியை விவாகரத்து செய்ய உள்ளதாகவும் கூறியுள்ளார். மேலும் துணை நடிகையை காதலிப்பதாகவும் கூறி நம்ப வைத்துள்ளார். இதனைத் தொடர்ந்து கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் சென்னை வந்த அலெக்ஸ் OMR சாலையில் உள்ள ஓட்டலுக்கு அந்த நடிகையை வரவழைத்துள்ளார். பிறகு இருவரும் நெருக்கமாக இருந்து விட்டு உன்னை திருமணம் செய்து கொள்வதாக கூறி விட்டு அலெக்ஸ் வெளிநாட்டிற்கு பறந்து சென்று விட்டார்.

போலீசார் வழக்குப்பதிவு:

ஆனால் மாதங்கள் பல கடந்தும் கூட திருமணம் செய்து கொள்ளாமல் ஏமாற்றி வந்ததாக தெரிகிறது. இந்த நிலையில் தான் அந்த துணை நடிகை விருகம்பாக்கம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் அலெக்ஸ் மீது கடந்த ஏப்ரல் மாதம் புகார் அளித்துள்ளார்.

திருமணம் செய்து கொள்வதாக கூறி ஏமாற்றி வன்புணர்வில் ஈடுபடுதல் பிரிவின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இதையடுத்து அலெக்ஸிடம் விசாரணை நடத்த போலீசார் முடிவு செய்துள்ளனர். அவர் கனடாவில் இருப்பதால் சட்டரீதியிலான நடவடிக்கையில் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.

பாதிக்கப்பட்ட துணை நடிகை கூறுவது என்ன?

புகார் குறித்து துணை நடிகை கூறுகையில், "கடந்த 2017 ஆம் ஆண்டே தன்னை காதலிப்பதாக அலெக்ஸ் கூறி வந்த நிலையில் வெளிநாடு செல்லும் ஆசையில், 2018 ஆம் ஆண்டு வேலூரை சேர்ந்த வேறொரு பெண்ணை திருமணம் செய்துக்கொண்டார். அலெக்ஸ் அப்பெண்ணுடன் கனடாவில் பணி செய்து வந்தனர். திடீரென்று ஒருநாள் மீண்டும் என்னிடம் பேசிய அலெக்ஸ், ‘என் மனைவி என்னை கொடுமைப்படுத்துகிறார். அவருடன் என்னால் இருக்க முடியவில்லை அவரை விரைவில் விவாகரத்து செய்யப் போகிறேன். உன்னை காதலிக்கிறேன். திருமணம் செய்து கொள்’ எனக்கூறி வற்புறுத்தினார்.

அலெக்ஸ், நிஜமாகவே திருமண உறவில் பாதித்துள்ளார். அவரும் நம்மை உண்மையாக காதலிக்கிறார். அதனால் அவரையே திருமணம் செய்து கொள்ளலாம் என முடிவு எடுத்தேன். கடந்தாண்டு மே மாதம் என்னிடம் பேசிய அலெக்ஸ், ‘விரைவில் சென்னை வருகிறேன் அப்போது மனைவியை விவாகரத்து செய்கிறேன். பின் உன்னை திருமணம் செய்து கொள்கிறேன். கனடாவில் வசிக்க பிடிக்கவில்லை. இந்தியாவிலேயே செட்டில் ஆகிறேன்’ என்றார்.

மேலும் "கடந்தாண்டு இறுதியில் சென்னை வந்த அலெக்ஸ், டிசம்பர் மாதம் 6 ஆம் தேதி, சோழிங்கநல்லுாரில் உள்ள விடுதியில் அறை எடுத்து, இருவரும் ஒன்றாக தங்கினோம். என்னை கட்டாயப்படுத்தி திருமணம் செய்வதாக உறுதி அளித்த நிலையில் அவரிடம் என்னை பறிகொடுத்தேன். பின் கனடா சென்ற அலெக்ஸ், கண்டு கொள்ளவே இல்லை. அவர் சொன்னபடி மனைவியை விவாகரத்தும் செய்யவில்லை. மாறாக சமூகவலைதளத்தில் குடும்பத்துடன் மகிழ்ச்சியாக உள்ள வீடியோ மற்றும் படங்களை பகிர்ந்து வந்ததுடன், என் மொபைல் அழைப்பையும் நிராகரித்தார். நான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்தேன். அலெக்ஸ் மீது காவல்துறை நடவடிக்கை வேண்டும்" என்று அந்த துணை நடிகை தெரிவித்துள்ளார்.

போலீசார் வழக்குப்பதிவு செய்து அலெக்ஸின் பெற்றோரிடம், விசாரித்தனர். விசாரணைக்கு அலெக்ஸ் ஒத்துழைக்காத நிலையில், அவரை இந்தியா வரவழைத்து விசாரிக்க போலீசார் முடிவு எடுத்துள்ளனர். ஆனால் அவர் முதுகு வலி இருப்பதால் இந்தியாவிற்கு வர இயலாது என்று அலெக்ஸ் தரப்பில் போலீசாரிடம் கூறியதாக தெரிகிறது. இதனால், அடுத்தக்கட்ட நடவடிக்கை குறித்து போலீசார் ஆலோசித்து வருகின்றனர்.