தமிழ்நாடு

நடிகர்கள் துல்கர் சல்மான், பிரித்விராஜ் தொடர்புடைய 17 இடங்களில் அமலாக்கத்துறை சோதனை!

போலி ஆவணங்கள் மூலம் சொகுசுக் கார்கள் இறக்குமதி மற்றும் சட்டவிரோதப் பணப் பரிமாற்றம் தொடர்பாகத் திரைப்பட நடிகர்களான துல்கர் சல்மான், பிரித்விராஜ், அமித் சக்கலக்கல் தொடர்புடைய கேரளா மற்றும் தமிழ்நாடு உட்பட 17 இடங்களில் அமலாக்கத்துறை (ED) இன்று தீவிரச் சோதனை நடத்தி வருகிறது.

நடிகர்கள் துல்கர் சல்மான், பிரித்விராஜ் தொடர்புடைய 17 இடங்களில் அமலாக்கத்துறை சோதனை!
நடிகர்கள் துல்கர் சல்மான், பிரித்விராஜ் தொடர்புடைய 17 இடங்களில் அமலாக்கத்துறை சோதனை!
அந்நியச் செலாவணிச் சட்டத்தை மீறியது மற்றும் சட்டவிரோதப் பணப் பரிமாற்றம் ஆகியவை தொடர்பாகத் திரைப்பட நடிகர்களான துல்கர் சல்மான், பிரித்விராஜ், அமித் சக்கலக்கல் உள்ளிட்டோர் தொடர்புடைய இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் இன்று (அக். 8) தீவிரச் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.

சோதனைக்கான காரணம் மற்றும் பின்னணி

போலி ஆவணங்கள் மூலம் அருணாச்சலப் பிரதேசம், இமாச்சலப் பிரதேசம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களின் வழியாகச் சொகுசுக் கார்கள் இந்தியாவிற்குள் கொண்டு வரப்பட்டுள்ளன. இந்த கார்கள், கோவையைச் சேர்ந்த ஒரு கும்பலின் உதவியுடன் போலியான ஆர்டிஓ (RTO) சான்றிதழ் பெற்று, குறைந்த விலைக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது அமலாக்கத்துறை விசாரணையில் தெரியவந்துள்ளது.

அந்நியச் செலாவணி பரிவர்த்தனைகள் மற்றும் சட்டவிரோதப் பணப் பரிமாற்றம் மூலம் இந்தச் சொகுசு கார்கள் இறக்குமதி செய்யப்பட்டுள்ளதாக அமலாக்கத்துறை தெரிவித்துள்ளது. இந்தச் சட்டவிரோதப் பணப் பரிவர்த்தனையால் பயன் அடைந்தவர்கள் யார் யார், பின்னணியில் உள்ளவர்கள் குறித்து அமலாக்கத்துறை விசாரித்து வருகிறது.

சோதனை நடைபெற்ற இடங்கள்

இந்தச் சட்டவிரோதப் பணப் பரிவர்த்தனைகள் தொடர்பாகக் கேரளா மற்றும் தமிழ்நாடு முழுவதும் உள்ள 17 இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் இன்று சோதனை மேற்கொண்டு வருகின்றனர். எர்ணாகுளம், திருச்சூர், கோழிக்கோடு, மலப்புரம், கோட்டயம், கோயம்புத்தூர், சென்னை ஆகிய இடங்களில் சோதனை நடைபெற்று வருகிறது.

குறிப்பாக, திரைப்பட நடிகர்களான பிரித்விராஜ், துல்கர் சல்மான், அமித் சக்கலக்கல் ஆகியோரின் தொடர்புடைய இடங்கள், தனியார் நிறுவனங்கள், சில வாகன உரிமையாளர்கள் மற்றும் வாகன ஒர்க்‌ஷாப்கள் உள்ளிட்டவற்றில் அமலாக்கத்துறை சோதனை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.