சென்னை கடற்கரை முதல் தாம்பரம் வரை மின்சார ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதால் தாம்பரம் பேருந்து நிலையத்தில் பயணிகள் கூட்டம் அதிகரித்து கூட்டம் அலைமோதுகிறது.
சென்னை கடற்கரை முதல் எழும்பூர் வரை நான்காவது ரயில் பாதை அமைக்கும் பணிகள் கடந்த இரண்டு வாரமாக நடைபெற்று வருகிறது. ரயில் வழித்தடம் அமைப்பதற்காக அவ்வப்போது முக்கிய ரயில்கள் இயக்கும் நேரங்களில் மாற்றம் செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில், இன்று (மார்ச் -9) சென்னை கடற்கரை முதல் தாம்பரம் வரை இயக்கப்படும் புறநகர் ரயில்கள் மாலை 4.10 வரை ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.
இதற்கு பதிலாக, தாம்பரம் - கோடம்பாக்கம் இடையே 30 நிமிடங்களுக்கு ஒருமுறை 23 சிறப்பு பயணிகள் ரயில்கள் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் சென்னை கடற்கரையிலிருந்து செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருமால்பூர், அரக்கோணம் வழியில் செல்லும் ரயில்கள், சென்னை கடற்கரை - தாம்பரம் இடையே மட்டுமே ரத்து செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தாம்பரம் - கடற்கரை இடையே ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதால் தாம்பரம் பேருந்து நிலையத்தில் மக்கள் கூட்டம் அலைமோதுகிறது. இதனால் பயணிகள் கடும் அவதியடைந்து வருகின்றனர். தாம்பரம் பேருந்து நிலையத்தில் அலைமோதும் கூட்டம் அதிகரித்துக்கொண்டே இருப்பதால் கூட்ட நெரிசலுடன் காணப்படுகிறது.