தமிழ்நாடு

ஆறாய் ஓடிய குடிநீர்...அரக்கோணம் நிர்வாக அலட்சியம் என குற்றச்சாட்டு

அரக்கோணம் நகராட்சி நிர்வாகத்தின் அலட்சியம் காரணமாக பல லட்சம் லிட்டர் வீணாகி விட்டதாக பொதுமக்கள் குற்றச்சாட்டு

  ஆறாய் ஓடிய குடிநீர்...அரக்கோணம் நிர்வாக அலட்சியம் என குற்றச்சாட்டு
அரக்கோணத்தில் பல லட்சம் லிட்டர் குடிநீர் வீணாகி விட்டதாக பொதுமக்கள் குற்றச்சாட்டு
ராணிப்பேட்டை மாவட்டம், அரக்கோணம் நகர காவல் நிலையம் முன்பு பொதுமக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்யும் வகையில் பிரம்மாண்ட மேல்நிலை குடிநீர் தொட்டி பல ஆண்டுகளுக்கு முன்பு அமைக்கப்பட்டது. இந்த மேல்நிலை குடிநீர் தேக்க தொட்டி மூலமாக நகர மக்களுக்கு குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.

வீணான குடிநீர்

இந்நிலையில் பொதுமக்களுக்கு குடிநீர் விநியோகம் செய்யும் வகையில் நேற்று இரவு மேல் நிலை நீர் தேக்க தொட்டிக்கு தண்ணீர் ஏற்றப்பட்டது. அப்போது அங்கு கண்காணிப்பில் யாரும் இல்லாத காரணத்தினால் மேல்நிலை நீர் தேக்க தொட்டி நிரம்பி பல மணி நேரமாக குடிநீர் வெளியேறியதாக கூறப்படுகிறது.

அந்த வகையில் வெளியேறிய குடிநீர் ஆறு போல தெருக்களில் பாய்ந்து பிரதான சாலை வரை ஓடியது. இதனை அடுத்து சம்பந்தப்பட்ட நகராட்சி அதிகாரிகளுக்கு புகார் சென்ற நிலையில், உடனடியாக நகராட்சி நிர்வாகத்தினர் நடவடிக்கை மேற்கொண்டு மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிக்கு செல்லும் தண்ணீரை நிறுத்தினர்.

நிர்வாக அலட்சியம்

அரக்கோணம் நகராட்சி நிர்வாகத்தின் அலட்சியம் காரணமாக பல லட்சம் லிட்டர் குடிநீர் வீணாகி விட்டதாக பொதுமக்கள் குற்றம்சாட்டி வருகின்றனர். மேலும் குடிநீர் பற்றாக்குறையின்போது கூடுதலாக பத்து நிமிடம் குடிநீர் விநியோகம் செய்ய கோரிக்கை வைத்தும் நிராகரிக்கும் நகராட்சி நிர்வாகம் தற்போது பல மணி நேரம் குடிநீர் வீணாகி விட்டதாக வேதனை தெரிவிக்கின்றனர்.

மேலும் உரிய கண்காணிப்பு பணி மேற்கொள்ளாத நபர் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை முன்வைத்துள்ளனர்.