தமிழ்நாடு

கள்ளழகரை காண வந்து உயிரிழந்த பக்தர்.. சித்திரை திருவிழாவில் நடந்த சோகம்

மதுரை கள்ளழகர் சித்திரை திருவிழாவின் போது கள்ளழகர் எழுந்தருளும் மண்டகப்படி பகுதியில் நின்றுகொண்டிருந்த பக்தர் மயங்கி விழுந்து உயிரிழந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கள்ளழகரை காண வந்து உயிரிழந்த பக்தர்.. சித்திரை திருவிழாவில் நடந்த சோகம்
madurai Chithirai thiruvizha festival
மதுரை கள்ளழகர் கோவில் சித்திரை திருவிழாவின் சிகர நிகழ்வான கள்ளழகர் வைகையாற்றில் எழுந்தருளும் நிகழ்வினை காண மதுரை மட்டுமின்றி தமிழகம் முழுவதிலும் இருந்து பல்லாயிரக்கான பக்தர்கள் இன்று மதுரை வருகை தந்தனர். இந்நிலையில் அதிகாலை 3 மணி முதலாக கள்ளழகர் எழுந்தருளும் மண்டகப்படி பகுதிகளுக்குள் அனுமதிச்சீட்டு வைத்திருந்த முக்கிய பிரமுகர்கள் மட்டும் அனுமதிக்கப்பட்டனர்.

இதில் திருநெல்வேலி மாவட்டம் தாழையூத்து பகுதியைச் சேர்ந்த பூமிநாதன் (45) என்ற பொறியாளர் நின்று கொண்டிருந்தபோது திடீரென உடல் நலக்குறைவால் மயக்கம் ஏற்பட்டு கீழே விழுந்தார். இதனையடுத்து அருகில் இருந்தவர்கள் அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஆம்புலன்ஸ் மூலமாக பூமிநாதனை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆன்காங்கே தடுப்புகள் அமைக்கப்பட்டு இருந்ததால் ஆம்புலன்ஸ் விரைவில் வெளியேற முடியாத சூழல் ஏற்பட்டது.

இதனால் நீண்ட நேரமாக ஆம்புலன்ஸ் அங்கும் இங்குமாக அலைந்து திரியக்கூடிய நிலை ஏற்பட்டது. பின்னர் வேறு வழியின்றி கள்ளழகர் எழுந்தருளும் பகுதியான தண்ணீர் நிரப்பப்பட்ட பகுதியில் இருந்து ஆம்புலன்ஸ் புறப்பட்டு சென்றது. இந்நிலையில் அவரது உடலை பரிசோதித்த மருத்துவர் வரும் வழியிலயே பூமிநாதன் உயிரிழந்து விட்டதாக தெரிவித்துள்ளனர்.

முக்கிய பிரமுகர்களுக்கு அதிக அனுமதியா?

கள்ளழகரை சாமி தரிசனம் செய்வதற்காக மண்டகப்படிக்கு வந்த நபர் உயிரிழந்த நிலையில் அவரது குடும்பத்தினர் கதறி அழுதது சோகத்தை ஏற்படுத்தியது. கள்ளழகர் வைகை ஆற்றில் எழுந்தருளும் மண்டகப்படி பகுதிகளில் எந்த ஆண்டும் இல்லாமல் இந்த ஆண்டு அதிக அளவிற்கான முக்கிய பிரமுகர்களை அனுமதித்த நிலையில் கடுமையான நெரிசல் ஏற்பட்டது.
இதன் காரணமாக முக்கிய பிரமுகர்கள் கூட சாமி தரிசனம் செய்ய முடியாத சூழல் உருவானது என கூறப்படுகிறது. மேலும், மண்டகப்படியை சுற்றி கள்ளழகர் மூன்று முறை வலம் வருவதற்கு கூட நீண்ட நேரம் தாமதமானது.

இந்நிலையில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, சித்திரைத் திருவிழாவில் உயிரிழப்பு நேர்ந்தோர் குடும்பத்திற்கு நிவாரணம் வழங்கப்படும் என தெரிவித்துள்ளார்.