தமிழ்நாடு

கால தாமதமாகத் திறக்கப்படும் கால்நடை மருத்துவமனை: விவசாயிகள் அதிருப்தி!

பட்டுக்கோட்டை அருகே ஏனாதியில் உரிய நேரத்தில் மருத்துவமனையைத் திறந்து கால்நடைகளைக் காப்பாற்ற விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

 கால தாமதமாகத் திறக்கப்படும் கால்நடை மருத்துவமனை: விவசாயிகள் அதிருப்தி!
கால தாமதமாகத் திறக்கப்படும் கால்நடை மருத்துவமனை: விவசாயிகள் அதிருப்தி!
தஞ்சை மாவட்டம், பட்டுக்கோட்டை அருகே உள்ள ஏனாதி கிராமத்தில் உள்ள பகுதி நேர கால்நடை மருத்துவமனை, உரிய நேரத்தில் திறக்கப்படாததால் கால்நடை வளர்ப்போர் பெரும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். இதனால், கால்நடைகளின் ஆரோக்கியம் பாதிக்கப்படுவதோடு, விவசாயிகளின் அன்றாடப் பணிகளும் முடங்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

விவசாயிகள் அதிகம் வசிக்கும் ஏனாதி, பாலமுத்தி, நல்வழிக் கொல்லை, வேப்பங்காடு உள்ளிட்ட கிராமங்களுக்குப் பயனுள்ள வகையில், இங்கு ஒரு பகுதி நேர கால்நடை மருத்துவமனை செயல்பட்டு வருகிறது. வாரத்தில் செவ்வாய், வியாழன், சனி என மூன்று நாட்கள் மட்டுமே மருத்துவர்கள் இங்கு வருவது வழக்கம். ஆனால், காலை 8 மணிக்குத் திறக்கப்பட வேண்டிய மருத்துவமனை, ஒவ்வொரு வாரமும் 11 மணி கடந்தும் திறக்கப்படாமல் இருப்பதாகவும், இதனால் கால்நடைகளைச் சிகிச்சைக்காக நீண்ட நேரம் காத்திருக்க வேண்டிய நிலை உள்ளதாகவும் கால்நடை வளர்ப்போர் புகார் தெரிவித்துள்ளனர்.

மருத்துவமனை தாமதமாகத் திறக்கப்படுவதால், கால்நடை வளர்ப்போரின் அன்றாடப் பணிகள் பாதிக்கப்படுகின்றன. மேலும், உரிய நேரத்தில் சிகிச்சை கிடைக்காததால் கால்நடைகளின் நோயின் தாக்கம் அதிகரித்து, சில நேரங்களில் அவற்றின் உயிருக்கே ஆபத்து ஏற்படும் நிலை ஏற்படுவதாகவும் அவர்கள் கவலை தெரிவித்துள்ளனர். எனவே, உடனடியாக இந்த விவகாரத்தில் தலையிட்டு, உரிய நேரத்தில் மருத்துவமனையைத் திறந்து, கால்நடைகளுக்கு முறையாகச் சிகிச்சை அளித்து, கால்நடை வளர்ப்போரின் சிரமத்தைப் போக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி விவசாயிகள், கால்நடை வளர்ப்போர், பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.