தமிழ்நாடு

ராசிபுரத்தில் பட்டப்பகலில் துணிகரம்.. மிளகாய் பொடி தூவி ரூ.50,000 திருட்டு!

ராசிபுரத்தில் லிஃப்ட் தருவதாகக் கூறி இருசக்கர வாகனத்தில் அழைத்துச் சென்ற பெண், ஓய்வுபெற்ற செவிலியரிடம் மிளகாய் பொடி தூவி பணம் பறித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 ராசிபுரத்தில் பட்டப்பகலில் துணிகரம்.. மிளகாய் பொடி தூவி ரூ.50,000 திருட்டு!
Rs 50,000 stolen by throwing chili powder
நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தில், லிஃப்ட் தருவதாகக் கூறி இருசக்கர வாகனத்தில் அழைத்துச் சென்ற பெண், ஓய்வுபெற்ற செவிலியர் ஒருவரிடமிருந்து மிளகாய் பொடி தூவி ரூ.50,000 பணத்தைத் திருடிச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

லிஃப்ட் கொடுப்பதாக அழைத்த பெண்

நாமக்கல் மாவட்டம் புதன்சந்தை பகுதியைச் சேர்ந்த வசந்தகுமாரி (61), ஓய்வுபெற்ற அரசு செவிலியர். ராசிபுரம் அருகே உள்ள பாலபாளையம் பகுதியில் உள்ள தனது வீட்டின் பராமரிப்பு பணிகளை கவனிக்க அங்கு சென்றுள்ளார். அங்கு நடைபெற்ற "உங்களைத் தேடி உங்கள் ஊர்" அரசு முகாமில், தனது வீட்டிற்கு குடிநீர் இணைப்பு கோரி மனு அளிப்பதற்காக, புதன்சந்தை பேருந்து நிலையத்தில் பாலப்பாளையம் செல்லும் பேருந்துக்காக காத்திருந்தார்.

அப்போது அவ்வழியாக வந்த ஒரு பெண், வசந்தகுமாரிக்கு உதவுவது போல் லிஃப்ட் தருவதாகக் கூறி தனது இருசக்கர வாகனத்தில் அழைத்துச் சென்றார். வரும் வழியில், மூணுசாவடி சிவன் கோயில் அருகே ஆள் நடமாட்டம் இல்லாத செம்மாம்பட்டி ஏரி பகுதிக்குச் சென்று, இருசக்கர வாகனத்தை வேண்டுமென்றே சாலையோரத்தில் உள்ள பள்ளத்தில் கவிழ்ப்பது போல் பாவனை செய்து, வசந்தகுமாரியைக் கீழே தள்ளிவிட்டார்.

மிளகாய் பொடி தூவி பணம் திருட்டு

கீழே விழுந்ததில் வசந்தகுமாரிக்கு சிறு காயங்கள் ஏற்பட்டன. உடனே, அந்தப் பெண் வசந்தகுமாரியின் கழுத்தில் இருந்த 7 பவுன் தங்கச் சங்கிலியைப் பறிக்க முயன்றார். வசந்தகுமாரி சங்கிலியை கெட்டியாகப் பிடித்துக் கொள்ள, ஆத்திரமடைந்த அந்தப் பெண் தான் மறைத்து வைத்திருந்த மிளகாய் பொடியை அவர் மீது தூவினார். இதனால் வசந்தகுமாரி நிலைகுலைந்த நிலையில், அந்தப் பெண் வசந்தகுமாரி கையில் வைத்திருந்த ரூ.50,000 பணப்பையை திருடிச் சென்றுவிட்டார்.

பின்னர், அக்கம் பக்கத்தினர் உதவியுடன் ஆம்புலன்ஸ் மூலம் வசந்தகுமாரி ராசிபுரம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. லிஃப்ட் தருவதாகக் கூறி மிளகாய் பொடி தூவி, ஓய்வுபெற்ற செவிலியரிடம் பணம் திருடிய இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.