தமிழ்நாடு

ஆசைக்கு இணங்க மறுத்த மருமகளை கொலை செய்த மாமனார் கைது!

நாமக்கல் மாவட்டத்தில் கணவனை இழந்து தனியாக வாழ்ந்து வந்த தனது மருமகளிடம் தவறாக நடந்து கொள்ள முயன்றதோடு, ஆசைக்கு இணங்க மறுத்ததால் கத்தியால் குத்தி கொலை செய்த மாமனார் கைது செய்யப்பட்டுள்ளார்.

ஆசைக்கு இணங்க மறுத்த மருமகளை கொலை செய்த மாமனார் கைது!
Daughter-in-Law Murdered by Father-in-Law in Namakkal District
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அடுத்த நாமகிரிப்பேட்டை அருகே உள்ள சின்ன அரியாங்கவுண்டம்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் மாரிமுத்து. இவரது மனைவி அருள்ஜோதி (35), கூலி வேலை செய்து வருகிறார். அருள்ஜோதியின் கணவர் மாரிமுத்து கடந்த 2022ஆம் ஆண்டு நாய் கடித்து ஏற்பட்ட நோயால் உயிரிழந்தார்.

கணவரை இழந்த அருள்ஜோதி தனது இரண்டு பெண் குழந்தைகளுடன் தனியாக வசித்து வரும் நிலையில், அவரது மாமனார் சேட்டு (64) தொடர்ந்து அருள்ஜோதிக்கு பல்வேறு தொந்தரவுகளைக் கொடுத்து வந்ததாகக் கூறப்படுகிறது. இது குறித்து அருள்ஜோதி தனது பெற்றோரிடம் தெரிவித்ததையடுத்து, சமாதானப் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. இதன் பின்னர் சேட்டு, முள்ளுக்குறிச்சி பகுதிக்கு வேலைக்குச் சென்றுவிட்டார்.

சேட்டு வாரத்தில் ஞாயிற்றுக்கிழமை மட்டும் அருள்ஜோதியின் வீட்டிற்கு வந்து தனது பேத்திகளைப் பார்த்துவிட்டுச் செல்வது வழக்கம். இந்த வகையில் நேற்று, சேட்டு வீட்டிற்கு வந்தபோது அருள்ஜோதி வீட்டில் தனியாக இருந்துள்ளார். அப்போது, சேட்டு அருள்ஜோதியிடம் தவறாக நடக்க முயன்றதாகவும், அவரது ஆசைக்கு இணங்க மறுத்ததால் ஆத்திரமடைந்த சேட்டு, மறைத்து வைத்திருந்த கத்தியால் அருள்ஜோதியை சரமாரியாகக் குத்தியுள்ளார். இதில் அருள்ஜோதி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

சம்பவம் தொடர்பாக நாமகிரிப்பேட்டை காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து, தலைமறைவாக இருந்த சேட்டை கைது செய்து நீதிமன்றக் காவலுக்கு அனுப்பி வைத்தனர். சொந்த மாமனாரை, மருமகளிடம் தவறாக நடந்து கொள்ள முயன்றதோடு, கத்தியால் குத்தி கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.