தமிழ்நாடு

காதல் விவகாரச் சண்டையில் நீதிமன்ற ஊழியர் குத்திக்கொலை ..குற்றவாளி தப்பி ஓட்டம்!

திருவாரூரில் காதல் தொடர்பான சண்டையை விலக்கச் சென்ற நீதிமன்ற அலுவலக ஊழியர் கத்தியால் குத்தப்பட்டு பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. குற்றவாளி தப்பி ஓடிய நிலையில், உடன் இருந்த இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

 காதல் விவகாரச் சண்டையில் நீதிமன்ற ஊழியர் குத்திக்கொலை ..குற்றவாளி தப்பி ஓட்டம்!
காதல் விவகாரச் சண்டையில் நீதிமன்ற ஊழியர் குத்திக்கொலை ..குற்றவாளி தப்பி ஓட்டம்!
திருவாரூர் அருகே கூத்தாநல்லூர் பகுதியைச் சேர்ந்த முகமது ஆதாம் (வயது 25), தற்போது தென்காசியில் வசித்து வருகிறார். இவர், திருவாரூர் தாலுக்கா காவல் சரகத்திற்கு உட்பட்ட புலிவலம் பகுதியைச் சேர்ந்த இளம்பெண்ணைப் பல ஆண்டுகளாகக் காதலித்து வந்துள்ளார். மேலும் சமீபத்தில் அந்த இளம்பெண் முகமது ஆதாமிடம் பேசாமலும் அலைபேசியை எடுக்காமலும் தவிர்த்து வந்ததாகக் கூறப்படுகிறது. தொடர்ந்து முகமது ஆதாம் தொல்லை கொடுத்து வந்த நிலையில் இளம்பெண்ணின் தம்பி கோபிகிருஷ்ணன் அவரிடம் சண்டையிட்டதைத் தொடர்ந்து தென்காசியிலிருந்து தனது இரண்டு உறவினர்களை அழைத்துக் கொண்டு நேற்று இரவு இளம்பெண் வீட்டிற்குச் சென்று சண்டையிட்டுள்ளனர். மோதல் அதிகமாகவே முகமதுஆதாம் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்துக் கோபிகிருஷ்ணனை குத்த முயன்றபோது தப்பித்து புலிவலம் பகுதியில் ஓடிச்சென்றார்.

மேலும் அங்குக் குடியிருந்த பொதுமக்கள் அவர்களைத் தடுத்து வாக்குவாதத்தில் ஈடுபட்டிருந்தபொழுது, திருவாரூர் தியானபுரம் பகுதியைச் சேர்ந்த சபாபதி மகன் சந்தோஷ்குமார் வயது27. இவர் திருவாரூர் நீதிமன்றத்தில் அலுவலக ஊழியராகப் பணியாற்றி வருகிறார். இவர் சண்டையை விலக்கச் சென்றபொழுது முகமது ஆதாம் கத்தியால் குத்தியதில் சந்தோஷ்குமார் சம்பவ இடத்தில் பரிதாபமாக உயிரிழந்தார். மேலும் கோபிகிருஷ்ணன் ஊரைச் சேர்ந்த தட்சிணாமூர்த்தி என்பவருக்கும் கத்திக் குத்து விழுந்தது ரத்த வெள்ளத்தில் கிடந்த அவரை அக்கம்பக்கத்தில் இருந்தவர்கள் திருவாரூர் விளமல் ரோட்டில் உள்ள தனியார் மருத்துவமனைக்குக் கொண்டுசென்றனர். அங்கு அவருக்குத் தீவிரச் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

மேலும் சம்பவஇடத்திற்கு விரைந்து சென்ற தாலுக்கா காவல் நிலைய போலீசார் இறந்துபோன சந்தோஷ்குமார் உடலைப் பிரேதப் பரிசோதனைக்காகத் திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். குற்றவாளி முகமது ஆதாம் தப்பி ஓடியநிலையில் அவருடன் வந்த இரண்டு உறவினர்களான கூத்தாநல்லூர் பகுதியைச் சேர்ந்த முகமது ரசூல்தீன் வயது 21, தென்காசி பகுதியைச் சேர்ந்த ஹாஜி முகமது வயது 23 ஆக இருவரையும் போலீசார் கைதுசெய்து காவல் நிலையம் அழைத்துச்சென்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தப்பித்து ஓடிய முகமது ஆதாமை காவல்துறையினர் தீவிரமாகத் தேடி வருகின்றனர். காதல் விவகாரத்தில் நீதிமன்ற ஊழியர் உயிரிழந்தது திருவாரூர் நகர்ப் பகுதியில் நேற்று பெரும் பரபரப்பினை ஏற்படுத்தி உள்ளது இதில் இறந்து போன சந்தோஷ் குமாருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

இது தொடர்பான விசாரணை நடைபெற்று வரும் நிலையில், சண்டையை விலக்கச்சென்ற சந்தோஷ்குமார் உயிரிழந்தது திருவாரூர் நகரில் பெரும் சோகத்தையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.