சென்னை கீழ்ப்பாக்கம் பகுதியில் வசித்து வந்த சவுக்கு சங்கர் வீட்டில் சமீபத்தில் தூய்மை பணியாளர்கள் சிலர் கழிவுகளை கொட்டி போராட்டம் நடத்தியது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. தொடர்ந்து, இந்த சம்பவத்திற்கு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை தான் காரணம் என யூடியூபர் சவுக்கு சங்கர் குற்றம்சாட்டினார். மேலும், சென்னை மாநகராட்சி 37-வது வார்டு மாமன்ற உறுப்பினர் டில்லி பாபுவிற்கும் இந்த சம்பவத்தில் தொடர்பிருப்பதாக தெரிவித்ததாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவரும் கவுன்சிலருமான டில்லி பாபு இன்று சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் ஒன்றை கொடுத்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், “என் மீது தவறான ஒரு குற்றச்சாட்டை சவுக்கு சங்கர் வைத்துள்ளார். அதனை அவர் பேசிய யூடியூப் சேனலில் இருந்து நீக்க வேண்டும்.
என்னை பற்றி அவதூறாக பேசிய சவுக்கு சங்கர் வார்த்தைகளை திரும்ப பெற வேண்டும். அவர் பகிரங்கமாக மன்னிப்பு கேட்க வேண்டும். மக்களால் தேர்வு செய்யப்பட்ட என் மீது எனது பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் யூடியூப் சேனலில் பேசிய சவுக்கு சங்கர் மீது சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கவுன்சிலர் டில்லிபாபு தெரிவித்துள்ளார்.