தமிழ்நாடு

அதிமுக பிரச்சாரத்தில் குழப்பம்...போச்சம்பள்ளியில் கோஷ்டி மோதலால் சலசலப்பு

அதிமுக சார்பில் நடைபெற்ற திண்ணைப் பிரச்சாரத்தின்போது போச்சம்பள்ளியில் கட்சியினரிடையே சலசலப்பு ஏற்பட்டது.

  அதிமுக பிரச்சாரத்தில் குழப்பம்...போச்சம்பள்ளியில் கோஷ்டி மோதலால் சலசலப்பு
கோஷ்டி மோதல்

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் அதிமுக சார்பில் இன்று போச்சம்பள்ளியில் நான்கு வழிச்சாலையில் மாநிலங்களவை எம்.பி.தம்பிதுரை தலைமையில் திண்ணைப் பிரச்சாரம் நடந்து கொண்டிருந்தது. அப்போது, கிருஷ்ணகிரி மாவட்ட அதிமுக மாவட்ட செயலாளர் அசோக்குமார் (எம்எல்ஏ) மற்றும் பர்கூர் தெற்கு ஒன்றிய செயலாளர் டி.கே. திருமால் ஆகியோர் தலைமையில் செயல்படும் கே.பி.முனுசாமி கோஷ்டியைச் சேர்ந்தவர்கள் அங்கு வந்தனர். அவர்கள் தம்பிதுரையிடம் சில கேள்விகள் கேட்டனர். ஆனால், தம்பிதுரை அதைக்கவனிக்காமல், போச்சம்பள்ளி பேருந்து நிலையம் சென்றார்.

அங்குள்ள கடைகளுக்கு ‘சட்டமன்றத் தேர்தலில் அதிமுகக்கு வாக்களிக்கும்படி’ நோட்டீஸ் வழங்கினார். இதையடுத்து, நான்கு வழிச்சாலையில் அதிமுக ஆதரவாளர்களிடையே சலசலப்பு ஏற்பட்டது. தம்பிதுரை வரவேற்புக்காக நான்கு வழிச்சாலையில் இருந்து பேருந்து நிலையம் வரை பட்டாசுகள் வெடித்தனர். இதனால், பேருந்து போக்குவரத்து தடைப்பட்டு, பயணிகள் அவதியடைந்தனர். போச்சம்பள்ளி பகுதி பரபரப்பாக மாறியது.

திண்ணைப் பிரச்சாரம்

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கே.பி.முனுசாமி மற்றும் எம்.பி. தம்பிதுரை ஆகியோர் தலைமையில் இரண்டு கோஷ்டிகள் செயல்பட்டு வருகின்றன. இந்தப் பிளவு அதிமுக பிரச்சாரத்தில் தொடர்ந்து பாதிப்பை ஏற்படுத்திக் கொண்டிருக்கிறது.

இந்த நிலையில், தான் திண்ணைப் பிரச்சாரத்தின் போதும், அதிமுக நிர்வாகிகளின் கேள்விக்கு பதில் அளிக்காமலும், கவனிக்காமலும் சென்ற தொண்டர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. அதிமுகவில் இதுபோன்ற கோஷ்டி மோதல்களால் உட்கட்சிக்குள் நிர்வாகிகளிடையே சலசலப்பு எழுந்துள்ளது. மேலும் தேர்தல் நேரத்தில் இதுபோன்று செயல்பட்டால் அதிமுகவை பெரிய அளவில் பாதிக்கும் என்று தொண்டர்கள் அச்சம் தெரிவித்துள்ளனர்.