தமிழ்நாடு

உரிய ஆவணமின்றி கொண்டுவரப்பட்ட பணம்.. இளைஞர்கள் இருவரிடம் விசாரணை

உரிய ஆவணமின்றி 75 லட்சம் ரூபாயை ஆந்திராவில் இருந்து காரில் கொண்டு வந்த இளைஞர்கள் இருவரிடம் வருமான வரித்துறை அதிகாரி விசாரணை மேற்கொண்டுள்ளார்.

உரிய ஆவணமின்றி கொண்டுவரப்பட்ட பணம்.. இளைஞர்கள் இருவரிடம் விசாரணை
உரிய ஆவணமின்றி 75 லட்சம் ரூபாய் கொண்டு வந்த இருவரிடம் விசாரணை

சென்னை வியாசர்பாடி எம்.கே.பி நகர் 7-வது குறுக்கு தெருவில் சந்தேகத்திற்கிடமான முறையில் ஆந்திர பதிவு எண் கொண்ட கார் ஒன்று நீண்ட நேரம் நின்று கொண்டிருந்தது.  அப்போது அந்த வழியாக ரோந்து வந்த எம்.கே.பி நகர் காவல் நிலைய காவலர்கள் மகிமை ராஜ், ராஜ்குமார் ஆகியோர் சந்தேகத்தின் பேரில் காரில் இருந்தவர்களிடம் விசாரணை நடத்தினர். 

அப்போது அவர்கள் முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்ததால் சந்தேகமடைந்த போலீசார் அவர்களது காரை சோதனை செய்தனர். அதில்,  கட்டுக்கட்டாக 500 ரூபாய் நோட்டுகள் இருந்தது தெரிய வந்தது. மேலும் பணத்திற்கு உரிய ஆவணங்கள் இல்லாததால் உடனே போலீசார் பணம், கார் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.

மேலும் படிக்க: தமிழகத்தில் நிலவும் கடும் பனிமூட்டம்.. சிரமத்திற்குள்ளான பொதுமக்கள்

மேலும், சம்பந்தப்பட்ட இருவரையும்  காவல் நிலையம் அழைத்து வந்ததுடன் உயர் அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தனர். பின்னர் எம்.கே.பி நகர் உதவி ஆணையர் விரைந்து வந்து இருவரிடம் விசாரணை மேற்கொண்டனர். அதில், அவர்கள் ஆந்திர மாநிலம் நெல்லூரைச் சேர்ந்த யோகேஷ், விக்கி என்பது தெரியவந்தது.

மேலும், உரிய ஆவணங்கள் இன்றி 75 லட்சம் ரூபாய் பணம் கொண்டு வந்ததும் விசாரணையில் தெரியவந்தது.‌ தொடர்ந்து, அவர்கள் இருவரும் ஆந்திராவில் தொழில் செய்து வருவதாகவும் சென்னை வியாசர்பாடி எஸ்.பி.ஆர் சிட்டி பகுதியில் வீடு வாங்க பணம் கொண்டு வந்ததாக தெரிவித்துள்ளனர். 

இருப்பினும் இருவரும் தொடர்ந்து முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்தால் சந்தேகமடைந்த போலீசார் இது குறித்து வருமான வரித்துறையினருக்கு தகவல் தெரிவித்ததன் பேரில் வருமான வரித்துறை அதிகாரி பத்மநாபன் விரைந்து வந்து உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு வந்த 75 லட்சம் பணத்தை பறிமுதல் செய்தார். பின்னர் யோகேஷ், விக்கி இருவரையும் வருமான வரித்துறை அலுவலகத்திற்கு அழைத்து சென்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.