தமிழ்நாடு

மகனை கடத்தியதாக புகார்...பிரபல மல்டி பில்லியனர் குற்றச்சாட்டு...காவல்துறை விளக்கம்

சென்னையைச் சேர்ந்த பிரபல மல்டி பில்லியனர் காவல்துறையினர் மீது அளித்த லஞ்சப் புகாருக்கு சென்னை காவல்துறை விளக்கம்

மகனை கடத்தியதாக புகார்...பிரபல மல்டி பில்லியனர் குற்றச்சாட்டு...காவல்துறை விளக்கம்
விவாகரத்து வழக்கு

சென்னை அண்ணா நகர் மேற்கு பகுதியில் வசித்து வருபவர் தனியார் தொழில்நுட்ப நிறுவனத்தின் இணை நிறுவனர் பிரசன்னா சங்கர். இந்த நிறுவனத்தின் மதிப்பு 1.16 லட்சம் கோடி ரூபாய் ஆகும். இவருக்கும் இவரது மனைவி திவ்யா இருவருக்கும் திருமணம் ஆகி 10 வருடம் ஆகிறது. மேலும் இவர்கள் அமெரிக்காவில் வசித்து வந்துள்ளனர்.

பெங்களூரிலும் ஐடி நிறுவனம் ஒன்றை அமைத்து நிர்வாகித்து வருகின்றனர். இவர்களுக்கு 9 வயதில் மகன் உள்ளார். இந்நிலையில் கருத்து வேறுபாடு காரணமாக கணவன்- மனைவி இடையே அமெரிக்காவில் உள்ள நீதிமன்றத்தில் விவாகரத்து வழக்கு நடைபெற்று வருகிறது. இந்தியாவிலும் பிரசன்னா சங்கர் விவாகரத்து வழக்கு நீதிமன்ற்றத்தில் தொடர்ந்து உள்ளதாக தெரியவந்துள்ளது.

லஞ்சம் கேட்பதாக புகார்

மேலும் பிரசன்னா சங்கர் மற்றும் திவ்யா ஆகிய இருவரும் தங்களது மகனை மாறி, மாறி பார்த்துக் கொள்வதாக ஒப்பந்தம் செய்து கொண்டுள்ளனர். இந்நிலையில் கடந்த மார்ச் மாதம் பிரசன்னா மற்றும் திவ்யா குழந்தையுடன் சென்னை வந்துள்ளனர். ஒப்பந்த அடிப்படையில் மார்ச் மூன்றாம் தேதி கணவரின் நண்பர் கோகுல் என்பவரிடம் மகனை ஒப்படைத்ததாக கூறப்படுகிறது. அதன் பின்பு ஒப்பந்தப்படி மகனை ஒப்படைக்காமல் காலம் தாழ்த்தியதால் தொடர்ந்து மனைவி திவ்யா கணவன் பிரசன்னாவிடம் கேட்டுள்ளார்.

மகனை அழைத்துச் சென்ற கணவனின் நண்பர் கோகுலிடம் கேட்கும் பொழுது கணவர் அழைத்துச் சென்று விட்டதாக கூறியுள்ளார். இதனையடுத்து ஒப்பந்த அடிப்படையில் மகனை திருப்பி தராததால் திருமங்கலம் காவல் நிலையத்தில் மகனை கணவரின் நண்பர் ஆன கோகுல் கடத்தியதாக புகார் அளித்ததாக கூறப்படுகிறது.இந்த புகாரின் அடிப்படையில் பிரசன்னா சங்கரின் நண்பர் கோகுலை போலீசார் விசாரித்துள்ளனர். இந்த நிலையில் மல்டி பில்லினியர் என்பதால் 25 லட்சம் லஞ்சத்தொகை அதிகமாக கேட்பதாகவும் சமூக வலைதளத்தில் புகார் அளித்துள்ளார். குறிப்பாக இது வழக்கு தொடர்பாக பிரசன்னா சங்கர் காவல் நிலையத்தில் வழக்கறிஞர் ஒருவரை அனுப்பியதாகவும், அதன் அடிப்படையில் பிரசன்னாவின் வழக்கறிஞரிடம் திருமங்கலம் காவல்துறை உதவி ஆணையர் மற்றும் உதவி ஆய்வாளர் இரண்டு லட்ச ரூபாய் லஞ்சம் பெற்றுக் கொண்டு வழக்கை சாதகமாக கையாள்வதாக கூறியதாக பிரசன்னா குற்றம் சாட்டியுள்ளார்.

ரூ.25 லட்சம் லஞ்சம்

ஆனால் திடீரென தனது சொத்து மதிப்பின் அளவை தெரிந்து கொண்டு காவல் உதவி ஆணையர் மற்றும் உதவி ஆய்வாளர் 25 லட்சம் ரூபாய் லஞ்சம் கொடுக்க வேண்டும் என கேட்டு மிரட்டியதாகவும், குற்றம் சாட்டியுள்ளார். இந்நிலையில் மகன் கடத்தல் தொடர்பான விவகாரம் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களை தடுக்கும் சென்னை துணை ஆணையருக்கு மாற்றப்பட்டது. இருப்பினும் இந்த விவகாரத்தை நீதிமன்றத்தை நாடி தீர்வு பெற்றுக் கொள்வதாக தம்பதிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

இருப்பினும் மல்டி பில்லியனியர் பிரசன்னா காவல்துறை அதிகாரிகள் 25 லட்ச ரூபாய் லஞ்சம் கேட்டது தொடர்பாக அண்ணா நகர் துணை ஆணையர் தலைமையில் விசாரணைக்கு உத்தரவிடப்பட்டது. இந்த விசாரணையில் பிரசன்னா கடத்தல் தொடர்பான புகாருக்கு பயந்து பொய்யான தகவலை தனது ஆதரவாளர்கள் மூலம் பரப்பியதாக காவல்துறை தரப்பில் சமூக வலைதளத்தின் மூலம் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.


காவல்துறை மீது குற்றச்சாட்டு

குறிப்பாக பிரசன்னா தனது வழக்கறிஞர் தன்னிடம் 25 லட்ச ரூபாய் லஞ்சம் கொடுத்தால் மட்டுமே நண்பரான கோகுல கிருஷ்ணனை போலீசார் விடுவிப்பார்கள் என தகவல் தெரிவித்ததாக கூறியிருந்தார். இதனையடுத்து வழக்கறிஞர் பிரேமானந்திடம் போலீசார் விசாரணை மேற்கொண்டதில் இந்த போலீஸ் மீதான குற்றச்சாட்டை மறுத்துள்ளார்.

தான் எந்தவிதமான பணமும் காவல்துறைக்கு ஏற்பாடு செய்து கொடுப்பதாக தெரிவிக்கவில்லை என விசாரணையில் தெரிவித்ததாக போலீசார் குறிப்பிட்டுள்ளனர். மேலும் மல்டி பில்லியனர் பிரசன்னாவிடம் செய்த whatsapp உரையாடலை ஆதாரமாக காட்டி இந்த லஞ்சப் புகார் உண்மை இல்லை என வழக்கறிஞர் தெரிவித்ததாக காவல்துறை தரப்பில் கூறப்பட்டுள்ளது.

பொய்யான தகவல்

மேலும் பிரசன்னா நண்பரான கோகுல கிருஷ்ணனிடமே போலீசார் விசாரணை செய்வதில் எந்த காவல்துறை அதிகாரியும் நேரடியாகவோ மறைமுகமாகவோ பணம் கேட்கவில்லை என தெரிவித்துள்ளார். இந்தப் விசாரணையின் முடிவில் மல்டி பில்லியனர் பிரசன்னா சுமத்திய குற்றச்சாட்டுக்கு அடிப்படை ஆதாரம் இல்லை என காவல்துறை தெரிவித்துள்ளது.மகனை கடத்தியதாக கூறப்படும் புகாரியில் இருந்து தப்பிப்பதற்காக பொதுமக்களின் அனுதாபத்தை பெறுவதற்காக மல்டி பில்லியனர் பிரசன்னா இதுபோன்று பொய்யான சித்தரிக்கப்பட்ட குற்றச்சாட்டுகளை காவல்துறை அதிகாரிகள் மீது சுமத்தியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுபோன்று பொய்யான தவறான தகவல்களை வதந்திகளை சமூக வலைதளங்கள் மூலம் பரப்பினால் பொதுமக்கள் மத்தியில் மதிப்பை குறைக்கும் வகையில் செயல்பட்டால் சட்டப்படி குற்றம் எனவும் கூறி சென்னை காவல்துறை எச்சரித்துள்ளது.