தமிழ்நாடு

கோவை அரசு மருத்துவமனை மீது சிகிச்சை அலட்சியம் புகார்: முதல்வர் தனிப்பிரிவுக்கு நோட்டீஸ் - மருத்துவமனை முதல்வர் விளக்கம்!

கோவை அரசு மருத்துவமனையில் தனது தந்தைக்கு உரிய சிகிச்சை அளிக்கவில்லை எனவும் கிரிஸ்டல் ஊழியர்கள் லஞ்சம் கேட்பதாக முதலமைச்சரின் தனிப்பிரிவில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

கோவை அரசு மருத்துவமனை மீது சிகிச்சை அலட்சியம் புகார்: முதல்வர் தனிப்பிரிவுக்கு நோட்டீஸ் - மருத்துவமனை முதல்வர் விளக்கம்!
முதல்வர் தனிப்பிரிவுக்கு நோட்டீஸ் - மருத்துவமனை முதல்வர் விளக்கம்!
தனது தந்தைக்கு உரிய சிகிச்சை அளிக்கவில்லை என்றும், மருத்துவமனை ஊழியர்கள் லஞ்சம் கேட்டதாகவும் கூறி ஒரு பெண் அளித்த புகாரை அடுத்து, கோவை அரசு மருத்துவமனைக்கு முதலமைச்சரின் தனிப் பிரிவு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. இதற்கு மருத்துவமனை முதல்வர் கீதாஞ்சலி விளக்கம் அளித்துள்ளார்.

மனுதாரர் லட்சுமி என்பவர் அளித்த புகாரில், தனது தந்தை மோகன்தாஸ் (62) கடந்த மாதம் 25-ஆம் தேதி ரத்த வாந்தி மற்றும் வலிப்பு ஏற்பட்டு, கோவை அரசு மருத்துவமனையின் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டதாகத் தெரிவித்துள்ளார். பின்னர், அவரை வார்டிற்கு மாற்றிய பிறகு, முறையான சிகிச்சை அளிக்கப்படவில்லை என்றும், செவிலியர்கள் கவனக்குறைவாக இருந்ததாகவும் அவர் குற்றம் சாட்டியுள்ளார்.

மேலும், ஸ்கேன் எடுப்பதற்காகச் சென்றபோது, கிரிஸ்டல் பணியாளர்கள் லஞ்சம் கேட்டதாகவும், ஸ்கேன் அறிக்கை மறுநாள் தான் வழங்கப்படும் எனத் தெரிவித்ததாகவும் லட்சுமி தனது மனுவில் குறிப்பிட்டுள்ளார். இந்த அலட்சியம் காரணமாகத் தனது தந்தைக்குப் பக்கவாதம் ஏற்பட்டு உயிரிழந்துவிட்டதாகவும், இது தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

இந்த மனு தொடர்பாக மருத்துவமனை முதல்வர் கீதாஞ்சலி மற்றும் துறைத் தலைவர்கள் உள்ளிட்டோருக்கு முதலமைச்சரின் தனிப் பிரிவு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. இதற்குப் பதிலளித்த கீதாஞ்சலி, “உயிரிழந்த நோயாளி மோகன்தாஸ், நீரிழிவு, இதய நோய் மற்றும் மூளை ரத்தக்கசிவு போன்ற பல்வேறு உடல்நலப் பிரச்சினைகளால் ஏற்கனவே பாதிக்கப்பட்டிருந்தார். மேலும், அவருக்குப் புகைபிடித்தல், மது அருந்துதல் போன்ற பழக்கங்களும் இருந்தன.

மருத்துவமனைக்கு அவர் ரத்த வாந்தி, உயர் ரத்த அழுத்தம் போன்ற கடுமையான அறிகுறிகளுடன் வந்தபோது, உடனடியாக மருத்துவ நெறிமுறைகளுக்கு ஏற்ப அனைத்துச் சிகிச்சைகளும் அளிக்கப்பட்டது. சிகிச்சை அளிப்பதில் எந்தவித அலட்சியமும் நடைபெறவில்லை” என்று திட்டவட்டமாகத் தெரிவித்தார்.

லஞ்சம் மற்றும் ஸ்கேன் தாமதம் குறித்த குற்றச்சாட்டுகளுக்கும் அவர் பதிலளித்துள்ளார். மருத்துவமனையில் வெளிநோயாளிகளுக்கான (OP) MRI பரிசோதனைகள் காலை நேரங்களிலும், அதன் பின்னரே உள்நோயாளிகளுக்கான (IP) பரிசோதனைகளும் மேற்கொள்ளப்படுகின்றன. ஒவ்வொரு பரிசோதனைக்கும் 30 முதல் 45 நிமிடங்கள் ஆகும் என்பதால், சில சமயங்களில் தாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது என்று விளக்கம் அளித்தார்.

லஞ்சம் தொடர்பான குற்றச்சாட்டு குறித்து விசாரணை நடைபெற்று வருவதாகவும், எதிர்காலத்தில் இதுபோன்ற சம்பவங்கள் நிகழாமல் தடுக்கத் தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.