ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தில் பிரசித்தி பெற்ற பண்ணாரி மாரியம்மன் கோயில் குண்டம் திருவிழா நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், மத்திய இணையமைச்சர் எல்.முருகன் இன்று பண்ணாரி அம்மன் கோயிலுக்கு வருகை தந்து சாமி தரிசனம் மேற்கொண்டார். இதைத்தொடர்ந்து, பக்தர்கள் குண்டம் இறங்கும் பகுதியை நேரில் பார்வையிட்டார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “பிரசித்தி பெற்ற பண்ணாரி மாரியம்மன் கோயில் குண்டம் திருவிழா சிறப்பாக நடைபெற்று வருகிறது. விழா ஏற்பாடுகள் திருக்கோயில் நிர்வாகம் சார்பில் சிறப்பாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. குண்டம் திருவிழா தொடர்பான செய்தி சேகரிக்க வந்த செய்தியாளர்களை நள்ளிரவில் காவல்துறையினர் அனுமதித்திருக்க வேண்டும். இது தொடர்பாக ஈரோடு மாவட்ட ஆட்சியரிடம் நான் பேசுகிறேன்.
வரும் காலங்களில் செய்திகளை கொண்டு சேர்க்கும் பத்திரிகை மற்றும் ஊடகத்துறையினருக்கு தேவையான வசதிகளை செய்து தர அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். சமையல் எரிவாயு சிலிண்டர் விலை உயர்வு என்பது சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலை உயர்வை பொறுத்து நிர்ணயம் செய்யப்படுகிறது. கடந்த சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்ற தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் சிலிண்டர் ஒன்றுக்கு 100 ரூபாய் மானியம் தருவதாக தேர்தல் வாக்குறுதி அளித்தார். ஆனால் இதுவரையிலும் சிலிண்டருக்கான மானியத்தை திமுக அரசு வழங்கவில்லை” என்று கூறினார்.
மேலும், பாஜக மாநிலத் தலைவர் நியமனம் குறித்து கேள்வி கேட்டபோது பதிலளிக்காமல் சிரித்தபடி சென்றார்.
தமிழ்நாடு
திமுக அரசு சிலிண்டர் மானியம் வழங்கவில்லை- எல்.முருகன் குற்றச்சாட்டு
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சிலிண்டர் ஒன்றுக்கு 100 ரூபாய் மானியம் தருவதாக தேர்தல் வாக்குறுதி அளித்த நிலையில் இதுவரை அந்த மானியத்தை திமுக அரசு வழங்கவில்லை என்று கூறினார்.