தமிழ்நாடு

அதிமுக முன்னாள் அமைச்சர் காமராஜ் அண்ணன் மகன் கைது.. சிபிஐ அதிரடி சோதனை

புதுச்சேரி சாலை ஒப்பந்த பணிக்கு லஞ்சம் கொடுத்த புகாரில் அதிமுக முன்னாள் உணவுத்துறை அமைச்சர் காமராஜ் அண்ணன் மகன் இளமுருகனை சிபிஐ லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் கைது செய்தனர்.

அதிமுக முன்னாள் அமைச்சர் காமராஜ் அண்ணன் மகன் கைது.. சிபிஐ அதிரடி சோதனை
அதிமுக முன்னாள் அமைச்சர் காமராஜ்

சாலை ஒப்பந்த பணிக்காக புதுச்சேரி பொதுப்பணித்துறை அதிகாரிகளுக்கு  லஞ்சம் கொடுக்கப்படுவதாக சிபிஐ லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனை அடுத்து காரைக்காலில் இரண்டு கார்களில் வந்த 10 அதிகாரிகள் அதிரடியாக சோதனை மேற்கொண்டனர். புதுச்சேரி பொதுப்பணித்துறை தலைமை பொறியாளர் தீனதயாளன் மற்றும் செயற்பொறியாளர் சிதம்பரநாதன் ஆகியோர் லஞ்சம் பெறும் போது கையும் களவுமாக சிக்கினர்.

அதாவது, செயற்பொறியாளர் சிதம்பரநாதன், தலைமை பொறியாளர் தீனதயாளின் ஆகியோர் 2 லட்ச ரூபாய் லஞ்சம் வாங்கும் போது பிடிபட்டனர். மேலும் லஞ்சம் கொடுத்த பொதுப்பணித்துறை ஒப்பந்ததாரர் இளமுருகன் என்பவரிடமிருந்து 50 ஆயிரம் ரூபாய் பணம்  பறிமுதல் செய்யப்பட்டது. காரைக்கால் கடற்கரை சாலையில் உள்ள புதுச்சேரி அரசின் சீகல்ஸ் விடுதியில்  பொதுப்பணித்துறை அதிகாரியிடம் விசாரணை நடத்தப்பட்டது. 

விசாரணையில் காரைக்கால் மாவட்டத்தில் நடைபெறும் 7 கோடியே 44 லட்சம் ரூபாய் மதிப்புள்ள சாலை பணிகளுக்கு விரைவில் அனுமதி தருவதற்கு ஒரு சதவீதம் லஞ்சப்பணம் பொதுப்பணித்துறை அதிகாரிகள் கேட்டதாகவும் , லஞ்சப் பணத்தில் சுமார் ஆறு லட்ச ரூபாயில் முதற்கட்டமாக 2 லட்சம் ரூபாய் லஞ்சம் வாங்கிய புதுச்சேரி பொதுப்பணித்துறை தலைமை பொறியாளர் தீனதயாளன் மற்றும் செயற்பொறியாளர் சிதம்பரநாதன் கைது செய்யப்பட்டது விசாரணையில் தெரியவந்துள்ளது.

மேலும் பொதுப்பணித்துறை அதிகாரிகளுக்கு சொந்தமான வீடு மற்றும் அலுவலகங்களில் சோதனை மேற்கொள்ளப்பட்டது. தலைமை பொறியாளர் தீனதயாளன் வீட்டில் இருந்து 65 லட்சம் பணமும், செயற்பொறியாளர் சிதம்பரநாதன் வீட்டிலிருந்து எட்டு லட்சம் என மொத்தம் 73 லட்ச ரூபாய் பணத்தை சிபிஐ அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். அது மட்டுமல்லாது பொதுப்பணித்துறை அரசு ஒப்பந்ததாரரான இளமுருகன் இடத்திலும் சிபிஐ அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். 

இவர் அதிமுக முன்னாள் உணவுத்துறை அமைச்சர் காமராஜர் அண்ணன் மகன் ஆவார். லஞ்சம் கொடுத்து அரசு ஒப்பந்த பணிகளை மேற்கொள்ள முயன்ற அதிமுக முன்னாள் அமைச்சர் காமராஜ் அண்ணன் மகன் இளமுருகன் மற்றும் இரண்டு புதுச்சேரி பொதுப்பணித்துறை அதிகாரிகள் என மூவரையும் சிபிஐ லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் கைது செய்து காரைக்கால் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.

பொதுப்பணித்துறை ஒப்பந்ததாரரான இளமுருகன் முன்பு மேற்கொண்ட அரசு ஒப்பந்த பணிகளில் எந்தெந்த அதிகாரிகளுக்கு எவ்வளவு லஞ்சம் கொடுத்து ஒப்பந்தம் பெற்றுள்ளார் என்று கோணத்திலும் அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கடந்த 2022-ஆம் ஆண்டு ஜூலை மாதம் அதிமுக முன்னாள் உணவுத்துறை அமைச்சர் காமராஜ் தொடர்பான 49 இடங்களில் தமிழக லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். இவர் வருமானத்திற்கு அதிகமாக 58 கோடி ரூபாய் சொத்து சேர்த்த விவகாரத்தில் வழக்குப் பதிவு செய்து சோதனை மேற்கொள்ளப்பட்டது குறிப்பிடத்தக்கது.